Published : 06 Apr 2018 07:43 AM
Last Updated : 06 Apr 2018 07:43 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: 900 இடங்களில் நடந்த மறியலில் 1 லட்சம் பேர் கைது- தமிழகம், புதுச்சேரி ஸ்தம்பித்தது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 900-க்கும் அதிகமான இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்பு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங் கள் ஸ்தம்பித்தன.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆதரவுக் கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை, ரயில் மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை வரை தடையை மீறி ஊர்வலமாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்டாலினை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். உழைப்பாளர் சிலை அருகே காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முழு அடைப்பு வெற்றி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘முழு அடைப்பு போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இது உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால் அரசியல் சாராதவர்களும் பெருமளவில் எங்களுடன் இணைந்து போராடி வருகிறார்கள். இதன் பிறகும் மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாங்கள் அனைவரும் பேசி முடிவு செய்வோம்’’ என்றார்.

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 98 இடங்களில் நடைபெற்ற மறியலில் 9,800 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். வேலூர், திருவண்ணாமலையில் 45 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 7,500 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் 142 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 16,360 பேரும், விழுப்புரம், கடலூரில் 86 இடங்களில் நடந்த மறியலில் 12,900 பேரும், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரியில் 133 இடங்களில் நடந்த மறியலில் 8,250 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 47 இடங்களில் நடந்த மறியலில் 4,900 பேரும், கோவை, திருப்பூர், நீலகிரியில் 87 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 8,400 பேரும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூரில் 296 இடங்களில் நடந்த மறியலில் 20,200 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 934 இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. இதில் கலந்துகொண்ட சுமார் 1 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு

தமிழகம் முழுவதும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. 60 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மறியல் காரணமாக ரயில்கள் தாமதமாகச் சென்றன. சென்னையில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கின. திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது.

கல்வீச்சு சம்பவங்களில் 41 பேருந்து கள் சேதமடைந்தன. சென்னை உழைப்பாளர் சிலை அருகே கல்வீச்சில் சென்னை மாநகர கூடுதல் துணை ஆணையர் குமார் காயமடைந்தார். இதுதவிர மாநிலம் முழுவதும் கல்வீச்சு சம்பவங்களில் 6 போலீஸார் காயமடைந்தனர். சேலத்தில் தபால் நிலையம் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. திரையரங்குகள், சில பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருந்தன. தனியார்பள்ளிகள் இயங்கவில்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சில பேருந்துகள் மட்டும் வழக்கம்போல் பயணிகளை ஏற்றி வந்தன. இதனால், ஆத்திரம் அடைந்த சிலர் 7 பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தனர்.

கடைகள் அடைப்பு, பேருந்து, ரயில் சேவைகள் பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி, தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் நேற்று ஸ்தம்பித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x