Published : 20 Mar 2018 06:55 PM
Last Updated : 20 Mar 2018 06:55 PM

ஆர்டர்லி விவகாரம்;ஒரே நாளில் காவலர்களால் போற்றப்படும் நீதிபதி: வாட்ஸ் அப்பில் வைரலாகும் தகவல்கள்

அதிகாரிகள் வீட்டில் போலீஸார் ஆர்டர்லிகளாக ஏன் பணியாற்றுகிறார்கள், 1979-ம் ஆண்டே ஒழிக்கப்பட்ட பின்னும் ஏன் தொடர்கிறது என்று கேள்வி எழுப்பியதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒரே நாளில் போலீஸாரால் போற்றப்படுகிறார். ஆர்டர்லி குறித்த தகவல்களையும் போலீஸார் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறையில் நிலவி வரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களால் தற்கொலை செய்து வரும் காவலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  காவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்  உத்தரவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்த கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன் காவலர்களின் மன அழுத்தம் பணிச்சுமை குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார். பின்னர் 1979-ல் அரசாணை மூலம் நீக்கப்பட்ட ஆர்டர்லி முறை இதுவரி ஏன் தொடர்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் தற்போது ஆர்டர்லி பணி தொடர்வதாக தெரியவந்துள்ளது. காவல் அதிகாரிகள் வீட்டில் எடுப்பு வேலை செய்ய ஒவ்வொரு காவல் அதிகாரியும் குறைந்தபட்சம் 12 ஆர்டர்லி காவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது தெரியவருகிறது. எனவே அதிகாரிகள் வீட்டில் உள்ள ஆர்டர்லி காவல் விவரங்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் காவல்துறை இயக்குனருக்கும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

தமிழக காவல் அதிகாரிகள் இல்லங்களில் ஆர்டர்லி காவலர்கள் என்ற பெயரில் காவலர்கள் எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள் என்று டிஜிபி நோட்டீஸ் அனுப்பி விவரம் கேட்கும் அளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. 1979-ல் அரசாணை மூலம் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதும் தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் காலம் மாறுகிறது, விஞ்ஞானமும் வளர்கிறது. இது பல மாற்றங்களை கொண்டுவருகிறது. தற்போது காவல்துறையில் உள்ள இளைஞர்கள் படித்தவர்கள், அவர்கள் காவல்துறைக்கு கனவுகளுடன் வரும்போது பல பிரிட்டீஷ் காலத்திய முறைகள் இன்றும் இருப்பதைப் பார்க்கும் போது வெறுக்கிறார்கள். தங்களுக்குள் விமர்சிக்கிறார்கள்.

இளம் காவலர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்துக்கு நூற்றுக்கணக்கான வாட்ஸ் அப் குரூப்களையும், முகநூல், ட்விட்டர் பக்கங்களையும் வைத்துள்ளனர். காவல்துறை சட்டங்களை கரைத்துக் குடித்துள்ளனர். தவறு என்று தெரிந்தால் விமர்சிக்கின்றனர். பலர் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவோம் என்று தெரிந்தும் தைரியமாக விமர்சிக்கின்றனர்.

இதில் அறிவு சார்ந்த விஷயங்களும் உண்டு, உணர்ச்சிபூர்வமான விஷயங்களும் உண்டு. ஆனாலும் பொதுவான சாராம்சம் தங்களை மற்ற துறைகளில் உள்ளது போல் மனிதனாக மதிக்கவேண்டும், லீவு, மற்ற சலுகைகள் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்ற உரிமை சார்ந்த பிரச்சினையில் உறுதியாக உள்ளனர்.

காவலர்களுக்கு சங்கம் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சியில் எதையும் மறுக்க முடியாது. பழைய பிரிட்டீஷ் கால முறைகள் எடுபடாது என்பதையும் சக மனிதராக நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்டர்லி முறை பற்றி நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது காவலர்களிடையே உற்சாகத்தை உருவாக்கி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்பிலும், சமூக வலைதளங்களிலும், உயர் அதிகாரிகளின் இல்லங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விவரங்கள் பரவத் தொடங்கியுள்ளன. ஒரே நாளில் காவல் துறையினர் மத்தியில் நீதிபதி கிருபாகரன் ஹீரோவாக போற்றப்படுகிறார்.

முகநூலில் நீதிபதி கிருபாகரனுக்கு ஆயிரக்கணக்கான காவலர்கள் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர். எந்தெந்த அதிகாரிக்கு எத்தனை ஆர்டர்லி உள்ளனர் என்ற பட்டியலை காவலர்களே முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். நீதிபதி கிருபாகரன் பல அதிரடியான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அவருக்கு இந்த வழக்கில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x