Published : 20 Mar 2018 05:35 PM
Last Updated : 20 Mar 2018 05:35 PM

விதிகளை மீறி 144 தடை பிறப்பித்த நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை: கனிமொழி வலியுறுத்தல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா? அல்லது சங் பரிவார் அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரை நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைய திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அம்மாவட்டத்தில் மார்ச் 19 முதல் 23 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், எதிர்ப்பை மீறி ரத யாத்திரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு, அவர் சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''கலவரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே நடைபெறும் யாத்திரைதான் சங் பரிவார் அமைப்புகள் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரை என்பது அனைவரும் அறிந்ததே. அமைதி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்றுவதை அனுமதிக்காமல் தடுக்க வேண்டியது ஒவ்வொரு தலைவர் மற்றும் அதிகாரியின் கடமை.

ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள தடை உத்தரவு, அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்கிறாரா, அல்லது சங் பரிவார் அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவில், ரத யாத்திரைக்கு ஒரு சிறு குந்தகம் ஏற்பட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், அப்படி ரத யாத்திரையில் சிக்கலை உருவாக்க சிலர் திட்டமிட்டுள்ளதால், 144 தடைச் சட்டம் பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த உத்தரவையடுத்து, மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும் சங் பரிவார் அமைப்பினருக்கு ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தையும், அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய சந்தீப் நந்தூரி, மத உணர்வோடு, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும், கலவரத்தைத் தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நடத்தை விதிகளை மீறி, செயல்பட்டுள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீது தமிழக அரசு உடனடியாக அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கனிமொழி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x