Last Updated : 20 Mar, 2018 05:40 PM

 

Published : 20 Mar 2018 05:40 PM
Last Updated : 20 Mar 2018 05:40 PM

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கேற்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவும், நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பங்கேற்கும் 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை நடிகர் ஆர்யா தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்.

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும்.

எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x