Published : 20 Mar 2018 04:38 PM
Last Updated : 20 Mar 2018 04:38 PM

ம.நடராஜனின் வழிகாட்டுதலில் தான் கடந்த 30 ஆண்டு காலத் தமிழ்நாடு இயங்கியது- இயக்குநர் பாரதிராஜா

‘ம.நடராஜனின் வழிகாட்டுதலில் தான் கடந்த 30 ஆண்டு காலத் தமிழ்நாடு இயக்கியது’ என இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடராஜனின் மறைவு குறித்து இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ''என் பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய, ‘எம்.என்.’ என்று நான் அன்பாக அழைக்கும் நடராஜன் மறைவுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். ‘புதிய பார்வை’ பத்திரிகையின் தொடக்க விழா கன்னிமரா ஹோட்டலில் நடந்தபோது குத்துவிளக்கு ஏற்றி உரையாற்றினேன். அதன்பின் நான் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.

நல்ல மனிதருக்கு இப்படியும் எதிர்ப்பா? என்று வருந்தினேன். மனிதநேயமிக்க மனிதரை இழந்து விட்டதற்காக இன்று வருந்துகிறேன். இலக்கியம், அரசியலில் சாதித்த ஒரு மனிதர் பிரிந்துவிட்டதற்காக கண் கலங்குகிறேன்.

கல்லூரி நாட்களிலேயே மொழிப் போராளியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடராஜன். இனமான மொழிக்காகப் போராடும் குணம் கொண்டவர். தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி, புலிகளுக்கு வலு சேர்த்தவர். ஈழப் போராளிகளின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைத்ததில் இவரின் பங்கு ஒரு வீர வரலாறு. இதை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறேன்.

‘அரசியல் சாணக்யன்’ என்று ராஜீவ்காந்தியால் பாராட்டப்பட்டவர். 25 ஆண்டு காலமாக ஒரு சந்நியாசி போல துறவு வாழ்க்கையைக் கடைப்பிடித்து, இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவர் நினைத்திருந்தால் அரசியலில் உச்ச இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால், இவரின் வழிகாட்டுதலில் தான் கடந்த முப்பது ஆண்டு காலத் தமிழ்நாடு இயங்கியது என்பதை யாராலும் மறக்கவும் முடியாது... மறுக்கவும் முடியாது.

சில இழப்புகள் நம்மை உயிர்வரை வலிக்கச் செய்யும். நடராஜனின் இறப்பு, என் ஆணிவேரையே அசைத்துவிட்டது. இவரின் ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாறட்டும். இவரைப் பிரிந்து வாடும் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதல் கொடுக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x