Published : 20 Mar 2018 03:53 PM
Last Updated : 20 Mar 2018 03:53 PM

ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதா? எத்தனை பேர் ஆர்டர்லி?- அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி நோட்டீஸ்

 ஆர்டர்லி முறை பற்றி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆர்டர்லி முறையை ஏன் ஒழிக்கவில்லை, எத்தனை போலீஸார் ஆர்டர்லியாக பணியாற்றுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி பட்டியல் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பணியின்போது போலீஸார் உயிரிழப்பது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில், காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் போலீஸார் ஆர்டர்லி என்ற பெயரில் வீட்டு வேலை, சமையல் வேலை, துணி துவைப்பது, நாயை வாக்கிங் கூட்டிச்செல்வது, குழந்தைகளைப் பராமரிப்பது என வேலைக்காரர்களாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து எம்ஜிஆர் சட்டம் இயற்றியும் இதுவரை அது தொடர்வதேன், ஆர்டர்லியாக தொடர்பவர்கள் எத்தனை பேர் என பட்டியல் அளிக்க உத்தரவிட்டு மார்ச் 22-க்கு வழக்கை ஒத்திவைத்தார். இது போலீஸார் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆர்டர்லியாக பணியாற்றும் போலீஸார் பட்டியலை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள், காவல்துறை தலைவர்கள், ஏடிஜிபிக்கள், குற்ற ஆவணக் காப்பகம், போலீஸ் அகடாமி, சிபிசிஐடி, ஆயுதப்படை, பொருளாதார குற்றப்பிரிவு, மனித உரிமை ஆணையம், ஊர்க்காவல் படை, கோர்செல் சிஐடி, அமலாக்கம், அதிரடிப்படை, ரயில்வே, கடலோர காவல்படை, குற்றப்பிரிவு, பயிற்சி பிரிவு, ஐஜி செயலாக்கம், உளவுப்பிரிவு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு அனைவரும் உடனடியாக பதிலளிக்கும் படி கேட்டுள்ளார். கேள்விகள் வருமாறு:

1.1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து அரசாணை இயற்றப்பட்ட பின் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதா இல்லையா?

2.ஆர்டர்லி முறை அரசாணை மூலம் ஒழிக்கப்பட்ட பிறகும் எப்படி தொடர்கிறது?

3.காவல் உயரதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் வீட்டில் எத்தனை போலீஸார் ஆர்டர்லியாக பணியாற்றுகின்றனர். (பட்டியலை தனியாக அளிக்கவும்)

4.அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகளில் அமர்த்தப்படுவது போல் காவல் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் வீட்டில் அலுவலக உதவியாளர்கள், வேலை ஆட்களை பொதுப்பணித் துறையிலிருந்து ஏன் அமர்த்தவில்லை?

இவை தவிர சில தகவல்களை எண்ணிக்கையாக அளிக்கும்படி டிஜிபி டிகேஆரிடம் கேட்டுள்ளார். அதில் கேட்கபட்ட விபரங்கள் வருமாறு:

1. கடந்த 10 ஆண்டுகளில் போலீஸிலிருந்து விட்டோடிகளாக பணியைவிட்டு ஓடியவர்கள் எத்தனை பேர்? (ஆண்டு வாரியாக பட்டியல் அளிக்கவும்)

2. கடைசி 10 ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் எத்தனை போலீஸார்?(ஆண்டு வாரியாக பட்டியல் அளிக்கவும்)

3.கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட போலீஸார் எத்தனை பேர்? (ஆண்டு வாரியாக பட்டியல் அளிக்கவும்)

4.கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பணியிலிருந்தபோது மரணம் அடைந்த போலீஸார் எத்தனை பேர்? (ஆண்டு வாரியாக பட்டியல் அளிக்கவும்)

இவ்வாறு டிஜிபி நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கேள்விகளுக்கான தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வரும் மார்ச் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x