Published : 20 Mar 2018 02:03 PM
Last Updated : 20 Mar 2018 02:03 PM

ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது ஏன்?- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு இருந்து வரும் எதிர்ப்பு குறித்தும், தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேரவையில் விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதாவது:

''ஸ்ரீ ராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை ஒன்று கடந்த 13.2.2018 அன்று அயோத்தியாவில் தொடங்கியது. இந்த ரத யாத்திரை, அச்சங்கத்தின் தேசியச் செயலாளர் சக்தி சாந்த ஆனந்த மகரிஷி தலைமையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புறப்பட்டு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ளது.

20.3.2018 அன்று கேரளா மாநிலம் புனலூரிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வழியாக நமது மாநிலத்திற்குள் நுழைந்து, ராஜபாளையம், மதுரையை வந்தடைந்து, மறுநாள் 21.3.2018 அன்று ராமேஸ்வரத்தை அடைகிறது. பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து 22.3.2018 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி அடைந்து, மறுநாள் 23.3.2018 அன்று திருவனந்தபுரத்திற்கு செல்கிறது.

ராம் ராஜ்ய ரத யாத்திரை நமது மாநிலத்தில் வருவதற்கு சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழ் ஆதரவு அமைப்புகளும் மற்றும் சில அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று கோரி காவல் துறையினரிடம் மனுக்கள் அளித்தனர்.

ஸ்ரீ ராமதாச மிஷன் சர்வதேச சங்கம் என்ற அறக்கட்டளை சார்பாக இந்த ராம ராஜ்ய ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் இந்த ரத யாத்திரைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. அம்மாநிலங்களில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இதுவரை இந்த யாத்திரை கடந்து வந்துள்ளது.

இந்த ரத யாத்திரை தமிழ்நாட்டிற்குள் வருவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, யாத்திரை செல்லும் மாவட்டங்களில் காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், திருநெல்வேலி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 121 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்கிறேன், ஐந்து மாநிலத்திலே இந்த ரத யாத்திரை நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. எதிர்க்கட்சியினர் பேசும்போது எங்களுடைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள். நான் பேசும்போது, தொடர்ந்து குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்தினார். அதை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இங்கே அரசியல் சாயம் பூசுவது சரியல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா மதத்திற்கும் சம உரிமை உண்டு. அதை யாரும் தடை செய்ய முடியாது. ஜனநாயக நாடு. இந்த மதம், அந்த மதம் என்று வேறுபடுத்தி காட்ட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. அந்தக் கடமையை கடைபிடித்து தான் இங்கே பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியது போல, இந்த ரதம் பல மாநிலங்கள் கடந்து அதாவது மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறது. மீண்டும் இங்கே முடித்து விட்டு கேரளா வழியாக தான் செல்கிறது. இதிலே எவ்வித பிரச்சினையும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். அதுதான் தெளிவாகத் தெரிகிறது'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x