Published : 20 Mar 2018 12:59 PM
Last Updated : 20 Mar 2018 12:59 PM

பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை: பல்வேறு இடங்களில் போராட்டம்

திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் மீறி, விஷ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் நுழைந்தது.

மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதற்கு திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழையவிட மாட்டோம் எனவும் அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

இதனால், நெல்லை மாவட்டத்தில் மார்ச் 19 முதல் 23 வரை 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் மாவடம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ரத யாத்திரையை எதிர்க்க வந்த விசிக தலைவர் திருமாவளவன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தன் ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல் முருகன் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ரத யாத்திரையை தடுப்பதற்காக தென்காசியில் முகாமிட்டிருந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் கைது செய்யப்பட்டார். பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை பலத்த எதிர்ப்பையும் மீறி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், தமிழக - கேரள எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதி வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தது. இந்த ரத யாத்திரையை பல்வேறு இந்து அமைப்பினர் வரவேற்றனர். பலத்த போலீஸார் பாதுகாப்புடன் செங்கோட்டை, புளியரை, கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவுள்ள இந்த ரத யாத்திரை இன்று மாலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, செங்கோட்டையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் தன் ஆதரவாளர்களுடன் கைதானார். மேலும், எஸ்டிபிஐ , மனித நேய மக்கள் கட்சியினரும் கைதாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x