Published : 20 Mar 2018 11:58 AM
Last Updated : 20 Mar 2018 11:58 AM

நடராஜனின் மறைவு அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது: திருநாவுக்கரசர் இரங்கல்

நடராஜனின் இறப்புச் செய்தியை அறிந்து தாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடராஜனின் மறைவு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “நடராஜன் திடீரென மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இளம் வயது முதல் கல்லூரி படிப்பின்போதே திமுக மாணவர் அமைப்பில் இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு பொதுவாழ்வை தொடங்கியவர் நடராஜன். மக்கள் தொடர்பு மாவட்ட அதிகாரியாக, அரசு பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர்.

“தமிழரசி”, “புதிய பார்வை” போன்ற இதழ்கள் தொடங்கி சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பல நூல்களின் ஆசிரியர். தமிழ் வளர்ச்சியிலும், தமிழர்களின் நலனிலும் அக்கறைகொண்டு தொடர்ந்து பாடுபட்டு வந்தவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்து அவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வந்தவர். அதிமுக ஜெயலலிதா தலைமையில் தனியாக உருவாகி செயல்படத் தொடங்கியபோது அவருக்கு பக்கபலமாக இருந்து அக்கட்சியின் வளர்ச்சிக்கு தூண் போல் துணை நின்றவர். பலர் கட்சியிலும், ஆட்சியிலும் பல பதவிகள் பெறுவதற்கு உறுதுணையாய் இருந்து பலரை அரசியலில் உருவாக்கியவர். எல்லோரிடத்திலும் இனிமையாகவும் நாகரிகமாகவும் பழகக்கூடிய சிறந்த பண்பாளர். இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொடர்ந்து பாடுபட்டவர்.

ஆண்டுதோறும் பொங்கல் விழா போன்ற பல விழாக்களை நடத்தி தமிழ் அறிஞர்களை கவுரவித்தும், ஊக்குவித்தும் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்.

நடராஜனின் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை மிகுந்த மனத்துயரோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x