Published : 20 Mar 2018 10:57 AM
Last Updated : 20 Mar 2018 10:57 AM

தமிழ் ஈழ உணர்வாளர் நடராஜனின் மறைவு உள்ளத்தை உலுக்குகின்றது: வைகோ இரங்கல்

நடராஜனின் மறைவுச் செய்தி இதயத்தில் வேலாகப் பாய்ந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் களத்தில் நின்ற நண்பர் நடராஜனின் மறைவு செய்தி என் இதயத்தில் வேலாகப் பாய்ந்தது.

மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது தகுதி வாய்ந்த இளைஞர்களைப் பணிகளில் அமர்த்த அவர் துணை நின்றதையும், தமிழ் ஈழ விடுதலைக்காக அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் செய்த எண்ணற்ற உதவிகளையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை எழுப்பிட, தொடக்கத்தில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து, அத்தியாகிகள் கோட்டத்திற்கான நிலத்தைப் பெற்றுத் தந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையின் சாட்சியமாகவும், உயிர்க்காவியமாகவும் அம்முற்றம் திகழ்ந்திட அரும்பாடுபட்டவர் நடராஜன்.

முதன்முறை அவரது உடல்நலம் பாதித்து குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அங்கே விரைந்து சென்றேன். அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் உரையாடியபோது, அவரது கண்கள் பனித்ததையும், தொடர்ந்து நான்கு முறை சென்று, அவருக்கு அறுவை மருத்துவம் நடைபெறுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பும் அவர் அருகில் இருந்ததையும் மறக்க முடியுமா?  

மார்ச் 14-ம் நாளன்று, அவரது உடல் நலம் மேலும் குன்றியதை அறிந்து, அந்த இரவில் நான் மருத்துவமனை சென்று, அவர் படுக்கை அருகே நின்றபோது, தூக்கத்தில் இருந்தார். 

அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x