Published : 20 Mar 2018 10:28 AM
Last Updated : 20 Mar 2018 10:28 AM

நடராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சசிகலாவின் கணவர் நடராஜனின் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடராஜனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடராஜனின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் உடன் வந்திருநதார். மு.க.ஸ்டாலின், நடராஜனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ”நடராஜனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. மாணவப் பருவத்தில் தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியவர் நடராஜன்.

தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவராக, திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அதுமட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, அவர் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை ஒருக்காலும் நாம் மறந்துவிட முடியாது. தொடக்கக் காலத்தில் திமுகவின் மாணவர் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று நிகழ்ச்சிகளையும் மறந்துவிட முடியாது. ஒரு இலக்கியவாதியாக, தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக விளங்கிய நடராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், புதிய பார்வை பத்திரிகையின் ஊழியர்கள் அத்தனை பேருக்கும், திமுக சார்பிலும், குறிப்பாக தலைவர் கருணாநிதியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x