Published : 20 Mar 2018 08:15 AM
Last Updated : 20 Mar 2018 08:15 AM

போலீஸாரின் தற்கொலைகளை தடுக்க நிபுணர் குழுவை அமைக்க உள்துறை செயலருக்கு உத்தரவு: தவறினால் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதி என்.கிருபாகரன் எச்சரிக்கை

போலீஸாரின் தற்கொலைகளைத் தடுக்க, நாளை மறுதினத்துக்குள் (22-ம் தேதி)உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்காவிட்டால் உள்துறைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழக போலீஸாரின் மனக்குறைகளை உளவியல்ரீதியாகத் தீர்க்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டுமென கடந்த 2012-ல் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் போலீஸாரின் தற்கொலை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகக் கூறி வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், ‘‘இந்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக டிஜிபி, கடந்த மார்ச் 12-ம் தேதி உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

6 ஆண்டுகள் கடந்துவிட்டன

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு விவரம்: தமிழகத்தில் உள்ள போலீஸார் பல்வேறு இன்னல்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆளாக்கப்படுகின்றனர். இதைக்கருத்தில் கொண்டுதான் கடந்த 2012-ம் ஆண்டே போலீஸாரின் மனக்குறைகளைத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் உளவியலாளர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தக்குழுவை தமிழக அரசு அமைக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் வழக்கு, விசாரணைக்கு வரும்போது ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி இழுத்தடித்துக்கொண்டே செல்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது. போலீஸாருக்கான பணி நேரம் எவ்வளவு என்பது குறித்தும், அவர்களுக்கு முறையாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதையும் நிபுணர்கள் குழு அமைத்து தீர்மானிக்க வேண்டியுள்ளது.

ஆர்டர்லி முறை கூடாது

600 முதல் 700 பேர் போலீஸ் வேலையே வேண்டாம் என உதறிவிட்டுச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது. மேலும் கடந்த 2010-ல் 19 பேரும், 2011-ல் 31 பேரும், 2012-ல் 58 பேரும், 2013-ல் 31 பேரும், 2014-ல் 27 பேரும், 2015-ல் 16 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அவர்களின் பணிச்சுமையும், விடுப்பு மறுக்கப்படுவதுமே அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் கூட ஆர்டர்லியாக போலீஸார் வேலை பார்த்து வருகின்றனர். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

மனு அழுத்தம்

எனவே 1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறை கலைக்கப்பட்டு விட்டது என்றால் தற்போதும் ஆர்டலியாக போலீஸாரை பணியமர்த்துவது ஏன்? எவ்வளவு போலீஸார் தற்போது ஆர்டலியாக பணிபுரிந்து வருகின்றனர்? அமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வீடுகளில் அலுவலக உதவியாளர்கள், வேலையாட்கள் பொதுப்பணித் துறை மூலமாக நியமிக்கப்படுவது போல, உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும், ஒய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளிலும் ஏன் நியமிக்கக்கூடாது?

கடந்த 10 ஆண்டுகளில் வேலையை உதறிவிட்டுச் சென்ற போலீஸாரின் எண்ணிக்கை எவ்வளவு? பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் இறந்துள்ளனர்? தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பாதுகாப்புப் பணிக்காக பல மணிநேரம் கால்கடுக்க நிறுத்தப்படும் ஆண், பெண் போலீஸார் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுவும் ஒரு வகையில் மன அழுத்தம்தான்.

பட்டியல் தர வேண்டும்

எனவே, போலீஸாரின் மனக்குறைகளைக் களையும் விதத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி நிபுணர்கள் குழுவை அமைத்து அதற்கான பட்டியலை வரும் மார்ச் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x