Published : 20 Mar 2018 08:12 AM
Last Updated : 20 Mar 2018 08:12 AM

பெங்களூரு சிறையில் நாங்கள் ஜெயலலிதாவை பார்த்த ஆதாரம் உள்ளதா?: ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி

பெங்களூரு சிறையில் ஜெயலலிதாவை நாங்கள் பார்த்த ஆதாரம் உள்ளதா? என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக எம்எல்ஏ பி.ரங்கநாதன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பேசினார்.

அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் பி.தங்கமணி:

நிதிநிலை அறிக்கையில் எங்கள் தலைவருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து ரங்கநாதன் கொச்சைப்படுத்தி பேசினார். அவர் நினைவிடத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். கடன் வாங்கி நினைவிடம் கட்டுவதாகக் கூறுகிறார். செம்மொழி மாநாடு, கடன் வாங்கித்தான் நடத்தப்பட்டதா? திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி இருந்தது. சேலத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த பாப்பாரப்பட்டி சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டதே? சேலம் ஜெயிலில் சென்று குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்த சம்பவம் நடந்ததே?’’ என்றார். இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்: சேலம் கொலை வழக்கில் பாப்பாரப்பட்டி சுரேஷ் மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் உண்மையில்லை என்று உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றமும் தெரிவித்துவிட்டது. சேலம், சிறையில் நான் வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்தது உண்மைதான். அதேபோல், நீங்கள் உங்கள் தலைவர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது பார்த்தீர்களே?

அமைச்சர் பி.தங்கமணி: பெங்களூரு சிறையில் நாங்கள் அவரை பார்த்ததற்கு ஆதாரம் இருந்தால் கூறுங்கள். நாங்கள் அவர் விடுதலையாகி வரும்போது அவரை வரவேற்கச் சென்றோம். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x