Published : 20 Mar 2018 08:06 AM
Last Updated : 20 Mar 2018 08:06 AM

மலையேற்றம் சென்றவர்கள் குரங்கணி காட்டுத் தீயில் பலியான சம்பவம்: அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்றதே காரணம்- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

மலையேற்றத்துக்கு அங்கீகரிக்கப்படாத பாதையில் சென்றதாலேயே குரங்கணி காட்டுத் தீயில் மலையேற்றக் குழுவினர் சிக்கியதாக சட்டப்பேரவையில் முதல் வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், குரங் கணி காட்டுத் தீ சம்பவம் தொடர் பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராம சாமி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து முதல் வர் பழனிசாமி பேசியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முதுவாக்குடி பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் சூழலியல் சுற்றுலா தொடங்கப்பட்டது. அதன்படி 11.4 கி.மீ. நீளத்துக்கு மலையேற்றப் பாதை அமைக்கப்பட்டது. குரங்கணியில் தொடங் கும் இப்பாதை கேரள எல்லை யில் உள்ள டாப் ஸ்டேஷன் வரை செல்கிறது.

திருப்பூரைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் குரங்கணி யில் இருந்து டாப் ஸ்டேஷன் செல்ல கடந்த 10-ம் தேதி 12 நுழைவுச் சீட்டு பெற்றுள்ளனர். இவர்கள் 10-ம் தேதி இரவு கொழுக்குமலை தேயிலை தோட்டத்தில் தங்கியுள்ளனர். அங்கு இரவு தங்க அனுமதி கிடையாது. நுழைவுச் சீட்டு அனுமதியும் 10-ம் தேதி இரவே முடிந்துவிட்டது. மேலும், இக்குழுவினர் 11-ம் தேதி முன்அனுமதியின்றி, மலையேற்றத்துக்கு அங்கீகரிக்கப்படாத கொட்டக்குடி காப்புக்காடு வழி யாக 7.1 கி.மீ. சென்றுள்ளனர்.

சென்னை மலையேற்ற சங்கம் மூலமாக 27 பேர் கொண்ட குழுவினரும் 10-ம் தேதி குரங்கணி வந்துள்ளனர். இவர்கள் கொழுக்குமலையில் உள்ள தனியார் தேயி லைத் தோட்டத்தில் இரவு தங்கியுள்ளனர். அந்தத் தோட்டமும் ஓய்வு இல்லமாக செயல்பட அனு மதி இல்லை. இந்த 27 பேரில் 3 பேர் கேரளா சென்றுவிட்டனர். மற்ற 24 பேரும் மலையேற்றத்துக்கு அங்கீகரிக்கப்படாத கொட்டக்குடி காப்புக்காடு வழியாக 11-ம் தேதி சென்றுள்ளனர். இந்த இரு குழுவினரும் கொழுக்குமலையில் இருந்து குரங்கணி செல்ல எந்த அனுமதியும் பெறவில்லை. இவ்வாறு வரும்போது எதிர்பாராதவிதமாக காட்டுத் தீயில் சிக்கினர்.

குரங்கணி பகுதியில் கடந்த 10-ம் தேதி காட்டுத் தீ ஏற்படவில்லை. கடைசியாக அங்கு பிப்ரவரி 15-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டு, வனத் துறையால் அணைக்கப்பட்டது.

காட்டுத் தீ ஏற்பட்டதை கடந்த 11-ம் தேதி மதியம் 2.30 மணி அள வில் கண்டறிந்த வனத் துறையி னர் அங்கு விரைந்தனர். அவர் கள் மாலை 5 மணிக்கு அங்கு சென்றபோதுதான் மலையேற்றக் குழுவினர் காட்டுத் தீயில் சிக்கியது தெரியவந்தது. எனது வேண்டுகோளின் பேரில், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், வனம், வருவாய், காவல் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். மத்திய பாதுகாப்புத் துறையின் ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டது. 11-ம் தேதி இரவு முழுவதும் மீட்புப் பணி நடந்தது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

குரங்கணி பகுதியில் எண் ணெய் பதம் கொண்ட சுக்குநாரி புற்கள் அதிகம் இருந்ததால் தீ வேகமாகப் பரவியுள்ளது. விபத்து தொடர்பாக வனவர் ஜெயசிங் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனுமதியின்றி 12 பேரை மலையேற்றம் அழைத்துச் சென்ற ரஞ்சித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வருவாய், பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x