Published : 20 Mar 2018 07:58 AM
Last Updated : 20 Mar 2018 07:58 AM

தனுஷ்கோடி கடற்கரையில் தினந்தோறும் குவியும் ஜெல்லி மீன்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து?: தடையை மீறி கடலில் குளிப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதை தொடர்ந்து, அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடற்கரை சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. இந்தக் கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஏப்ரல், மே மாத கோடை விடுமுறையில் அதிகம் பேர் வருவர்.

தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. மேலும் இதன் மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி இறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால் தனுஷ்கோடி, மூன்றாம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரால் அங்கு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை அறிவிப்பை கண்டுகொள்ளாமல் தடையை மீறி, சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்த வண்ணம் உள்ளனர்.

ஆபத்தான ஜெல்லி மீன்கள்

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:

ஜெல்லி மீன்கள் குழியுடலி வகையைச் சேர்ந்தவை. உலகளவில் 200-க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன் இனங்கள் உள்ளன. வெப்ப மண்டல கடற்பகுதியான பாக். ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் 50-க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன் இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகாலங்களில் ஜெல்லி மீன்களின் நடமாட்டம் கரை பகுதிகளில் அதிகமாக இருக்கும். இறந்த ஜெல்லி மீன் மனித உடலில் பட்டால் கூட அரிப்பை உண்டாக்கும்.

சில ஜெல்லி மீன்களுக்கு மட்டுமே விஷக் கொடுக்குகள் உள்ளன. இதனை வேட்டையாடுவதற்கும், தற்காப்புக்காகவும் அவை பயன்படுத்தும். ஜெல்லி மீன்கள் மனிதர்கள் கடலில் இருக்கும்போது உரசினால் அரிப்பு மட்டும் ஏற்படும். ஆனால், தற்காப்புக்காக மனிதனை கொடுக்குகளால் கொட்டினால் வாந்தி, மயக்கம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.

‘சீ சிக்னஸ்’ பிரச்சினை உள்ளவர்கள் ஜெல்லி மீன் உள்ள பகுதிகளில் நீச்சல் அடிப்பதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் தற்போது ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால், கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x