Published : 03 Mar 2018 08:39 PM
Last Updated : 03 Mar 2018 08:39 PM

தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுப்பு: போராட்டத்தை தீவிரப்படுத்த விசிக வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பிரதமரநி நேரில் சென்று சந்திப்பதென தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழக பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் மறுக்கிறார் என்றும், இது கண்டனத்துக்குரியது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காவிரிப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதற்கு பிரதமரை நேரில் சென்று வலியுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தமிழகப் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு பிரதமர் மறுக்கிறார் என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது. இந்திய பிரதமரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்குத் தமிழகம் தீவிரமான போராட்டங்களில் இறங்க வேண்டும். அதன் வடிவத்தைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை உடனே முதலமைச்சர் கூட்ட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ‘கர்நாடக தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காது’ என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சுட்டிக்காட்டினோம். ‘மத்திய அரசை பணிய வைக்க தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பிர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகுவோம் என எச்சரிக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்தோம். நாங்கள் அஞ்சியது போலவே இப்போது மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது.

உச்சநீதிமன்றம் விதித்தக் காலக்கெடு முடிவதற்கு மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் விதத்தில் நாம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிகளின் அவசரக் கூட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் கூட்ட வேண்டுமாய் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x