Published : 03 Mar 2018 07:12 PM
Last Updated : 03 Mar 2018 07:12 PM

கேரள முதல்வர் பினராயி விஜயுடன், நடிகர் கமல் ஹாசன் சந்திப்பு

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் இன்று சந்தித்துப் பேசினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்தபின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் முடிவு செய்தார். இதற்காக முதல்வர் பினராயி விஜயனிடனம் அனுமதி பெறப்பட்டது.

அதன்பின், நடிகர் கமல் ஹாசன் மருத்துவனைக்கு சென்று முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். நடிகர் கமல் ஹாசனை முதல்வர் பினராயி விஜயனும், அவரின் மனைவியும் வரவேற்றனர். அதன்பின்னர் முதல்வர் பினராயி விஜயனுடன் சிறிது நேரம் பேசிய, கமல் ஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்தபோது, அதாவது ஓணம் பண்டிகையின் போது, கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசினார். அப்போது, நிருபர்களிடம் பேசிய நடிகர் கமல் ஹாசன் அரசியல் பாடம் கற்க வந்திருக்கிறேன் என்று கூறி தனது அரசியல் நிறம் ஒருபோதும் காவியாக இருக்காது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x