Published : 03 Mar 2018 05:27 PM
Last Updated : 03 Mar 2018 05:27 PM

காவிரி விவகாரத்தில் மத்திய அரசைப் பணிய வைப்பது எப்படி?- ராமதாஸ் கூறும் 3 யோசனைகள்

காவிரி விவகாரத்தில் குழப்பங்களைத் தவிர்க்க எம்.பிக்கள் பதவி விலகி அழுத்தம் தர வேண்டும், போராட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 யோசனைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் உழவர் அமைப்புகளின் தலைவர்களைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவின் மீதான தொடர் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் மட்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவது எந்த வகையான நாகரிகம் என்பது தெரியவில்லை. எனினும் காவிரி சிக்கலில் தமிழகக் கட்சிகளிடையிலான ஒற்றுமை கருதி இதை சர்ச்சையாக விரும்பவில்லை.

ஆனால், முதல்வர்- எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பிலிருந்தும் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குழப்பம் அளிப்பவையாக உள்ளன. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கிறார். வேண்டுமானால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரை சந்திக்கும்படி தில்லியிலிருந்து தகவல் வந்திருக்கிறது' என்று தம்மிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ, 'அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. மாறாக, நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தியுங்கள் என்றுதான் முதல்வரிடம் பிரதமர் கூறியிருக்கிறார்' என விளக்கமளித்திருக்கிறார்.

இரண்டுக்குமே ஒரே பொருள் தான். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அல்ல... அதுகுறித்து தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழுவை சந்திக்கக் கூட பிரதமர் தயாராக இல்லை என்பதுதான் அதன் பொருள் ஆகும். இந்நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும். இவ்வளவுக்குப் பிறகும் தமிழக அரசு மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது ஏன்? என்பதுதான் பாமகவின் வினா.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையோ, விருப்பமோ அல்ல. மாறாக, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று கூறியுள்ளார். இது முறையல்ல என்பதால் மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காகத் தான் பிரதமரை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தீர்மானித்தது. அதற்கு மாறாக தமிழக தலைவர்களை பிரதமர் சந்திக்க மாட்டார் என்று கூறுவது தமிழகத்தை அவமதிக்கும் செயலாகும்.

தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை பிரதமர் மோடி சந்திக்கத் தேவையில்லை. மாறாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மார்ச் 29-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தால் போதுமானது. அவ்வாறு செய்ய வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை ஆகும். ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், அதுகுறித்து கோரிக்கை விடுப்பதற்காக வருபவர்களையும் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். இதை சகிக்க முடியாது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு சொல்லாமல் சொல்லிவிட்ட நிலையில் இனியும் பொறுமை காப்பது தமிழக உரிமைகளை மேலும், மேலும் தாரை வார்ப்பதற்கு சமமாகும். இது தொடர்பாக சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. கடந்த 12 ஆண்டுகளில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மீண்டும் அதே சடங்கை செய்வது எந்த அழுத்தத்தையும் தராது.

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பதவி விலகுதல், டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம் முன் தொடர்ந்து போராட்டங்களை நடத்துதல், தமிழகத்தில் காலவரையற்ற மறியல் போராட்டம் நடத்துதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே மத்திய அரசை பணிய வைக்க முடியும்.

எனவே, வெற்றுச் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்காமல், மேற்கண்ட போராட்டங்களை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு பாமக முழுமையான ஆதரவளிக்கும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x