Published : 03 Mar 2018 12:07 PM
Last Updated : 03 Mar 2018 12:07 PM

ஆந்திர சிறையில் வாடும் அனைத்து தமிழர்களையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: வாசன்

ஆந்திர சிறையில் வாடும் அனைத்து தமிழர்களையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நேற்று அதிகாலையில் திருப்பதியிலிருந்து கடப்பா செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் இருந்த 84 தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை செம்மரக்கட்டை கடத்த வந்திருப்பதாக அவர்களாகவே யூகம் செய்து தமிழர்களை கைது செய்தனர். இது தமிழக கூலித்தொழிலாளர்களை மிரட்டும் தொனியில் அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதும், அதில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் ஆந்திர சிறையில் வாடிக்கொண்டிருப்பதும் வேதனைக்குரியது.

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தும் தொழிலாளர்களையும், அவர்களை எந்த முதலாளிகள் பயன்படுத்துகிறார்களோ அவர்களையும் தான் காவல்துறை கைது செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது குற்றவாளிகளுக்கு ஆதரவாகவோ செயல்படுகின்ற வகையிலோ அப்பாவி கூலித்தொழிலாளர்களை கைது செய்வதும், துன்புறுத்துவதும், சிறையில் அடைத்து சித்ரவதைப்படுத்துவதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக இப்போது ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரில் பட்டதாரிகள் என பலர் உள்ளனர். இவர்கள் மீது செம்மரம் கடத்த வந்தவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கைது செய்தது ஏற்புடையதல்ல. இவர்களிடம் விசாரித்ததில் கூலி வேலைக்கும், கட்டிட வேலைக்கும், சமையல் வேலைக்கும் இடைத்தரகர் மூலம் அழைத்து வரப்பட்டதாக கூறுகின்றனர்.

ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திராவில் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதற்கும், இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் 5 தமிழர்கள் ஆந்திர ஏரியில் மர்மான முறையில் இறந்து கிடந்ததற்கும் ஆந்திர அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்காமல், உரிய நிவாரணம் கிடைக்காமல் இருப்பதோடு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் ஆந்திர சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற சூழலில், தற்போது 84 தமிழர்களை ஆந்திர காவல்துறை கைது செய்ததற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதோடு, ஆந்திர அரசிடம் பேசி இவர்களை மீண்டும் அழைத்து விசாரிப்பதும், அலைக்கழிப்பதும், மிரட்டுவதும் தேவையற்றது என்பதோடு, ஆந்திர சிறையில் வாடும் அனைத்து தமிழர்களையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இனி தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு வேலைக்குச் செல்ல விரும்புவோர் எந்த வேலைக்காக, யார் மூலம், எத்தனை நாட்கள், மாதம் என அனைத்து விவரங்களையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்திவிட்டு செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

இனிமேல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு சென்றால் அங்கே அவர்கள் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட வந்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறி ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்படாத நிலை ஏற்பட தமிழக அரசு அனைத்து நல்ல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x