Published : 03 Mar 2018 10:29 AM
Last Updated : 03 Mar 2018 10:29 AM

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு விவகாரத்தில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் தேவகோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகர தலைவர் பஞ்சநாதன் வரவேற்றார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசினர். பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழல் செய்தது கார்த்தி சிதம்பரம் மட்டுமல்ல. அவரது தந்தை ப.சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியும் தான். ஆறு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குள் தவறான கருத்துக்களை சிலர் கூறுகின்றனர்.

மதுவிலக்கு பிரச்சினையில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கமல் கூறிவருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரின் நடவடிக்கையை பெண்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழகத்தில் கருணை இல்லம் என்ற பெயரில் கருணையே இல்லாத செயல் நடந்து வருகிறது. இதன் பின்புலத்தை ஆய்வு செய்து தவறு செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பாஜக அரசு மதவாத அரசு என்று ஸ்டாலின் சொல்வதில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை.

வங்கிக் கடன் பெற்று வெளிநாடு தப்பிச் செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக வாக்குச்சாவடி ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் பட்டணம்காத்தானில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. இது மக்களை பாதுகாக்க சிபிஐ எடுத்த நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x