Published : 03 Mar 2018 09:44 AM
Last Updated : 03 Mar 2018 09:44 AM

‘தி இந்து’ மாலினி பார்த்தசாரதி, கமலா செல்வராஜ், வாணி ஜெயராம் உட்பட 6 பெண்களுக்கு ‘புதிய தலைமுறை - சக்தி’ விருது

‘தி இந்து’ குழுமத்தின் இணை தலைவர் மாலினி பார்த்தசாரதி, டாக்டர் கமலா செல்வராஜ், பாடகி வாணி ஜெயராம், இந்திய கிரிக்கெட் வீராங்கனை காமினி உட்பட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்களுக்கு ‘புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’ நேற்று வழங்கப்பட்டன.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் வகையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் ‘புதிய தலைமுறை சக்தி விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

2018-ம் ஆண்டுக்கான ‘புதிய தலைமுறை சக்தி விருது’ வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமைக்கான விருது ‘தி இந்து’ குழுமத்தின் இணை தலைவர் மாலினி பார்த்தசாரதிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் பி.சத்தியநாராயணன், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதையும் பாராட்டுச் சான்றையும் வழங்கினர்.

புலமைக்கான விருது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் துணிவுக்கான விருது உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலையில் காதலனை இழந்த கவுசல்யா சங்கருக்கும் திறமைக்கான விருது இந்திய கிரிக்கெட் வீராங்கனை காமினிக்கும் கருணைக்கான விருது சமூக சேவகி பாகீரதி ராமமூர்த்திக்கும் சாதனைக்கான விருது டாக்டர் கமலா செல்வராஜுக்கும் வழங்கப்பட்டன. கமலா செல்வராஜுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவும் பின்னணி பாடகி பி.சுசீலாவும் விருதை வழங்கினர்.

அர்ப்பணிப்பு உணர்வு

விருது பெற்ற ‘தி இந்து’ குழும இணை தலைவர் மாலினி பார்த்தசாரதி தனது ஏற்புரையில், ‘‘மிகவும் மதிப்புமிக்க, கவுரவமிக்க ‘புதிய தலைமுறை - சக்தி’ விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற விருதுகள் பெண்களைப் பெரிதும் ஊக்குவிக்கும். பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, பெயரளவில் இருக்கையை அலங்கரித்தோம் என்று இல்லாமல் கொள்கை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும்’’ என்றார்.

விருது பெற்ற கவுசல்யா, இந்த விருதை தனது காதலன் சங்கருக்கு சமர்ப்பிப்பதாக கண்ணீர் மல்க கூறினார்.

முன்னதாக, விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசிய புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் பி.சத்தியநாராயணன், ‘‘பெண்மையைப் போற்றவும் சாதனை புரியும் பெண்களை அடையாளம்கண்டு அவர்களை அங்கீகரிக்கவும் கடந்த 5 ஆண்டுகளாக சக்தி விருது வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களைப் போற்றுவது ஆண்களின் கடமை. முதலில் பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத் தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்றார்.

விழாவில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x