Published : 03 Mar 2018 09:38 AM
Last Updated : 03 Mar 2018 09:38 AM

உயர்கல்வி ஆலோசனைக்காக ஹெல்ப்லைன் வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் கல்வி வழிகாட்டி மையம்: மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஹெல்ப்லைன் வசதியுடன் 24 மணி நேரமும் இயங்கும் வழிகாட்டி மையத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், கல்வித் துறை சார்ந்த தகவல்கள், ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னை டிபிஐ வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எந்த பகுதி யைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாக எப்போது வேண்டுமானாலும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம். ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவையை முதல்வர் கே.பழனி சாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

டிபிஐ வளாகத்தில் கல்வி மேலாண்மை தகவல் மைய கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங் கும் இந்த கல்வி வழிகாட்டி மையத்தில், ஒரு ஷிப்டுக்கு 7 பேர் என்ற அடிப்படையில் 21 பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். சேவை தொடங்கப்பட்ட முதல் 8 மணி நேரத்துக்குள் 3 ஆயிரம் பேர் இந்த மையத்தை தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது நாளான நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக மையத் தின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

பகல் நேரத்தில் மாணவர்களின் பெற்றோரும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மாணவ-மாணவிகளும் தொடர்புகொண்டு ஆலோசனை கேட்பதாகவும் பெரும்பாலும் மேற்படிப்புகள், மாணவர் சேர்க்கை அறிவிக்கை, சேர்க்கை நடைமுறைகள், தொடர்பான ஆலோசனை கள் கேட்கப்படுவதாகவும் அவர் கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x