Published : 03 Mar 2018 08:37 AM
Last Updated : 03 Mar 2018 08:37 AM

50 ஆண்டுக்கு முன்பு ராஜராஜ சோழன், உலகமாதேவியார் சிலைகள் திருட்டு: தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மாமன்னன் ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் சிலைகள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே திருடப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றின் உயரம், எடை உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்தச் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட, அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம்.தென்னரசு, தொல்லியல் ஆய்வாளர்கள் நாகசாமி, குடவாயில் பாலசுப்பிரமணியன், ஐஏஎஸ் அலுவலர் இறையன்பு ஆகியோரைக் கொண்ட குழுவினர், குஜராத் சென்று சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெரிய கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கண்ட சிலைகள் குறித்த விவரங்கள், உயரம், எடை ஆகியன, அருங்காட்சியகத்தில் இருந்த சிலைகளோடு ஒத்திருப்பதை உறுதி செய்தனர்.

நரேந்திர மோடி பரிந்துரை

இதுகுறித்து, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து விவரங்களை தெரிவித்தபோது, அதை ஆர்வத்துடன் கேட்டறிந்த மோடி, சிலைகளை பெரிய கோயிலுக்கு திரும்ப அளிக்க விரும்பி, அருங்காட்சியகத் தலைவருக்கு பரிந்துரை செய்ததாகவும், ஆனால், அருங்காட்சியகத் தலைவர் பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டதாகவும் குழுவினர் மூலமாக தெரியவந்தது.

இந்நிலையில், இந்த 2 சிலைகளையும், திரும்பக் கொண்டு வர வலியுறுத்தி, தமிழக முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் அளித்த புகாரின்பேரில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, நேற்று டிஎஸ்பி வெங்கட்ராமன், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சிலைகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி த.செந்தில்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x