Published : 03 Mar 2018 08:32 AM
Last Updated : 03 Mar 2018 08:32 AM

தூத்துக்குடியில் சுங்கத்துறை பாதுகாத்து வந்த ரூ.5 கோடி மதிப்பிலான 15 டன் செம்மரக்கட்டைகள் மாயம்

தூத்துக்குடியில் சுங்கத்துறை பாதுகாப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 15 டன் செம்மரக்கட்டைகள் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடந்த 2013-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான, 15 டன் எடைகொண்ட செம்மரக்கட்டைகளை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த செம்மரக்கட்டைகள் மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒரு சரக்கு பெட்டகத்தில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு, தூத்துக்குடி துறைமுக புறவழிச்சாலையில் உள்ள தனியார் சரக்கு பெட்டக முனையத்தில், சுங்கத்துறையின் பாதுகாப்பில் இருந்துவந்தது.

இதுதொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, செம்மரக்கட்டைகளை ஏலம்விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சரக்கு பெட்டகத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். பெட்டகத்தில் இருந்த 15 டன் செம்மரக்கட்டைகளும் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். செம்மரக்கட்டைகளுக்கு பதிலாக பெட்டகத்தில் வெறும் மரத்தூள் மற்றும் வைக்கோல் மட்டுமே இருந்தன.

இதுகுறித்து தனியார் சரக்கு பெட்டக முனைய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சரக்கு பெட்டக முனைய நிறுவனம் சார்பிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x