Published : 03 Mar 2018 08:30 AM
Last Updated : 03 Mar 2018 08:30 AM

70-வது மடாதிபதி விஜயேந்திரர்: காஞ்சி சங்கர மடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றுக் கொண்டதாக சங்கர மடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இளைய மடாதிபதியை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய அவசரம் இல்லை; தேவைப்படும்போது மடாதிபதியால் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவைத் தொடர்ந்து மடாதிபதி பொறுப்புகளை தற்போது விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அறநிலைய துறைக்கு கடிதம்

அந்தப் பொறுப்புகளை வகித்து வந்த ஜெயேந்திரர் மறைந்ததால் அவரது அனைத்து பொறுப்புகளும் தானாக இவருக்கு வந்து சேரும். யாரும் நியமிக்க வேண்டியதில்லை. இவர் பொறுப்பேற்றுக் கொண்டதாக இந்து சமய அறநிலையத் துறைக்கும் நாங்கள் கடிதம் அனுப்பிவிட்டோம் என்றார்.

அடுத்த இளைய மடாதிபதி யார்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்கு உடனடியாக அவசரம் ஏதும் இல்லை. தேவைப்படும்போது மடாதிபதியே அவரை நியமிப்பார். மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தினம்தோறும் சடங்குகள் நடைபெறுகிறது. இது பொதுமக்களுக்கான நிகழ்ச்சி அல்ல. அவரது ஆராதனை விழா மார்ச் 13-ம் தேதி கோலாகலமாக நடைபெறும் என்றார்.

தண்டலத்தில் பிறந்தவர்

மடாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1969-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரநாராயணன். இவர் 1983-ம் ஆண்டு மே 29-ம் தேதி இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பல ஆண்டுகளாக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மடாதிபதி செய்ய வேண்டிய பணிகளை செய்து வந்தார். சந்திர மௌலீஸ்வரர் பூஜையும் இவரால் செய்யப்படுகிறது. சதுர்மாத விரதங்களையும் கடைபிடிப்பார்.

ஜெயேந்திரர் மறைவைத் தொடர்ந்து இவருக்கு மடாதிபதிக்கு உரிய முழுப் பொறுப்புகளும் வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x