Published : 03 Mar 2018 08:25 AM
Last Updated : 03 Mar 2018 08:25 AM

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை: பழனிசாமி-ஸ்டாலின் தொலைபேசியில் ஆலோசனை; இன்று இருவரும் நேரில் சந்தித்து பேசுகின்றனர்

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று எதிர்க்கட்சித் தலைர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசித்தார். பின்னர் முதல்வர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருவரும் இன்று சந்திக்கின்றனர்.

காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த பிப்.16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், தமிழகத்துக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 192 டிஎம்சி நீர், 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. நிலத்தடி நீர் இருப்பை காரணம் காட்டி, தமிழகத்துக்கு 14.75 டிஎம்சியை குறைத்த உச்ச நீதிமன்றம், அந்த நீரை கர்நாடகாவுக்கு வழங்கியது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இதை வரவேற்ற தமிழக முதல்வர், தண்ணீர் குறைப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

ஆனால், தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அனைத்து கட்சிக்கூட்டத்தை பிப்.23-ம் தேதி கூட்டுவதாக அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில், பிப்.22-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டதால், திமுகவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், மூத்த அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த பிப்.22-ம் தேதி தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 39 அரசியல் கட்சிகள் 14 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேரில் சந்தித்து முறையிடுவது என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றதுடன், விரைவில் பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுக்கவும் அரசை வலியுறுத்தின. இதற்கிடையில், கடந்த பிப்.24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த அம்மா இருசக்கர வாகன மானிய திட்ட தொடக்க விழாவுக்கு சென்னை வந்தார். அப்போது, மேடையிலேயே பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து மறுநாள், பிரதமர் மோடி டெல்லி புறப்படும் முன், விமான நிலையத்தில் வழியனுப்பச் சென்ற முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பாக மனுவும் அளித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமரை சந்திக்க தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று தலைமைச்செயலகத்துக்கு முதல்வர் கே.பழனிசாமி வரவில்லை. வீட்டில் இருந்தபடியே துறை அதிகாரிகளுடன், எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சிகளில் வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக விவாதித்தார்.

இடையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் கே.பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தலைமைச் செயலகம் வரும்படி அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வருகிறார். தொடர்ந்து அவர் முதல்வரை சந்திக்கிறார். அப்போது, காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படாத நிலையில், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர்.

கர்நாடகாவில் காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்கும் நிலையில், அதே விவகாரத்தில் தமிழகத்திலும் தற்போது மாநிலத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x