Published : 03 Mar 2018 08:13 AM
Last Updated : 03 Mar 2018 08:13 AM

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை

என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் மாஜிஸ்திரேட் நேற்று விசாரணை நடத்தினார். இதனிடையே பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை காமராஜர்புரத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமி, அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இருதரப்பிலும் பழிக்குப் பழியாக கொலைகள் அடிக்கடி அரங்கேறுகின்றன. இதில் ராஜபாண்டியன் தரப்பைச் சேர்ந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி முக்கியமானவர்கள். இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015-ல் செல்லூர் பகுதியில் மாயன் என்பவர் கொலையில் இருவரும் போலீஸில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.

மேலும், ராமநாதபுரத்தில் நடந்த இரு கொலை வழக்கிலும் இருவரும் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர்.

பல வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர். மதுரை செல்லூர் மற்றும் பிற காவல்நிலைய போலீஸார் தொடர்ந்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் கூட்டாளி மாயக்கண்ணன் வீட்டில் தங்கி இருந்த இருவரையும் போலீஸார் சுற்றி வளைத்தபோது அவர்கள் தாக்க முயன்றதால் என்கவுன்ட்டர் செய்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

செல்லூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின்பேரில், அலங்காநல்லூர் போலீஸார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில், ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் விக்னேஷ் மது நேற்று காலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர், அவர் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த இருவரின் சடலங்களை பார்வையிட்டார். மதியத்திற்கு மேல் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சடலங்களை பெற இருவரின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், அங்கு வந்திருந்த என்கவுன்ட்டருக்கு எதிரான சில அமைப்பினரிடம் சகுனி, இருளாண்டியின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின், சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முத்து இருளாண்டியின் சடலம் வரிச்சியூர் அருகிலுள்ள பொட்டப்பனையூரிலும், சகுனி கார்த்திக்கின் சடலம் கீரைத்துறையிலும் அடக்கம் செய்யப்பட்டது.

இதையொட்டி அரசு மருத்துவமனை, கீரைத்துறை, பொட்டப்பனையூரில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மருத்துவமனை வளாகத்துக்கு இரு ரவுடிகளின் கூட்டாளிகள் வந்துள்ளனரா எனவும் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேக நபர்களாக இருந்தால் அவர்களை வீடியோ எடுத்தனர்.

மனித உரிமை ஆணையத்துக்கு

எஸ்பி மணிவண்ணன் கூறியதாவது: கொலை வழக்கில் தொடர்புடைய சகுனி கார்த்திக், முத்து இருளாண்டியை பிடிக்க செல்லூர் போலீஸார் அங்கு சென்றபோது, வீட்டுக்குள் இருவரும் இருப்பதை போலீஸார் உறுதி செய்தனர். அவர்களை பிடிக்க சென்ற போலீஸார் மீது ரவுடிகள் தாக்கியதால் போலீஸாரும் தாக்கினர். இதில் இருவரும் இறந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, அரிவாள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், முத்து இருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, அவரது மைத்துனர் முதுகுளத்தூர் அருகிலுள்ள மேலகன்னச்சேரி ரவிச்சந்திரன் ஆகியோரையும் பிடித்துள்ளோம்.

இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த மாயக்கண்ணனை தேடுகிறோம். சமயநல்லூர் டிஎஸ்பி மோகன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில, தேசிய ஆணையத்துக்கு இச்சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

வீடுகளுக்கு பாதுகாப்பு

ரவுடிகள் என்கவுன்ட்டர் சம்பவத்தையடுத்து, வி.கே. குருசாமி, ராஜபாண்டியன் உறவினர்கள் வசிக்கும் காமராஜர்புரம், கீரைத்துறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்குள்ள முன்னாள் மண்டலத் தலைவர்களின் வீடுகளிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x