Published : 03 Mar 2018 08:08 AM
Last Updated : 03 Mar 2018 08:08 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்: குமரி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்- மனித எலும்புகளை கடித்தபடி விவசாயிகள் வந்தனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் செய்வதைக் கண்டித்து, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர், மனித எலும்புகளைக் கடித்தவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 100 நாள் விழிப்புணர்வு பேரணியை நேற்று முன்தினம் தொடங்கினர்.

நாகர்கோவிலுக்கு நேற்று வந்த இப்பயணக் குழுவினர், குமரி மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்றோ, பூமி பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மதாஸ் மற்றும் விவசாயிகளைச் சந்தித்து பரப்புரை செய்தனர்.

எலும்பை கடித்தவாறு மனு

பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, மனித எலும்புகளைக் கடித்தவாறு, குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவைச் சந்தித்து மனு கொடுக்க வந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு நிலவியது.

பாலைவனமாக்க முயற்சி

பின்னர், செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி நடக்கிறது. கர்நாடக மாநில தேர்தலை குறிவைத்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் காட்டுகின்றனர். இதன் மூலம் எங்களை மனித எலும்புகளை தின்ன வைத்து விட்டனர். நீதிமன்றம் கூறிய பின்பும் அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். நாளை (இன்று) திருநெல்வேலி மாவட்டம் செல்கிறோம்’’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x