Published : 03 Mar 2018 08:06 AM
Last Updated : 03 Mar 2018 08:06 AM

குன்னூர் பழங்குடியின கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் தொட்டிலில் சுமந்து செல்லப்படும் நோயாளிகள்

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் தோடர், கோத்தர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர், இருளர் ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குன்னூர் அருகே பக்காசூரன் மலை, சேம்பக்கரை, பம்பலக்கம்பை, கோழிக்கரை, செங்கல்புதுார், செங்கல்கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, சாலை வசதிகள் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகூட செல்ல முடிவதில்லை. இதனால், நோயாளிகள், கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலை தொடர்கிறது. இவ்வாறு நடந்து வரும்போது, வன விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சேம்பக்கரை கிராம தலைவர் நஞ்சுண்டன் கூறும்போது, “பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக, கோடிக்கணக்கான ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். ஆதிவாசி மக்களின் நலன் கருதி, சாலை உட்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்றார்.

உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டனிடம் கேட்டபோது, “உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட செங்கல்புதூர், சேம்பக்கரை, யானை பள்ளம், ஜோதிகொம்பை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால், சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வனத்துறையினரின் அனுமதி தேவை. ஆனால், அனுமதி பெறுவது பெரும் சிரமம்.

இந்நிலையில், நான்சச் எஸ்டேட் முதல் பக்காசூரன் மலை வரை 3 கி.மீ. சாலை மிக மோசமான நிலையில் இருந்தது. தற்காலிகமாக குழிகளில் மண் போட்டு, சாலை சமன்படுத்தப்பட்டது. நிரந்தரமான சாலை அமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூன் மாதம் பணி முடிவடையும். இதன்மூலமாக ஆதிவாசி மக்களுக்கு பெரும்பாலான சிரமங்கள் குறைந்துவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x