Last Updated : 13 Feb, 2018 04:03 PM

 

Published : 13 Feb 2018 04:03 PM
Last Updated : 13 Feb 2018 04:03 PM

மாநகராட்சி கடைகளுக்கான வாடகை உயர்வு: மு.க.அழகிரி கோரிக்கை நிராகரிப்பு

மதுரை மாநகராட்சி பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பாரதியார் வணிக வளாகத்தில் (பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம்) உள்ள கடைகளில் 3 கடைகளை குத்தகை எடுத்துள்ளேன். ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.10565 வாடகை செலுத்துகிறேன். இந்த கடைகளின் வாடகையை ரூ.13358- ஆக உயர்த்தி மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த தவறினால் கடை பொது ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2007-ல் வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளின் குத்தகை காலம் 3 ஆண்டுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வுடன் நீட்டிக்கப்படும். 9 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாடகை நிர்ணயம் செய்து ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நபர்களுக்கே கடைகளை திரும்ப ஒதுக்கலாம்.

இந்த அரசாணைக்கு எதிராக வாடகையை மாநகராட்சி உயர்த்தியுள்ளது. வாடகை உயர்த்துவதற்கு முன்பு குத்தகைதாரர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதன் பிறகே வாடகை உயர்வு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் திடீரென வாடகையை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பொதுப்பணித்துறை கட்டணம், சந்தை மதிப்பு, கட்டிடத்தி்ன் மதிப்பு, நிலத்தின் மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் வணிக வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டிட சேதத்தை கணக்கில் கொண்டு வாடகை கட்டணத்தில் குறைப்பு செய்யவில்லை. கட்டிடத்தின் மதிப்பு, நிலத்தின் மதிப்பு சரியாக நிர்ணயம் செய்யப்படவில்லை.

எனவே வாடகை உயர்வு தொடர்பாக மாநராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த நோட்டீஸை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மேலும் 20 கடைகளின் வாடகை உயர்வுக்கு எதிராக அந்த கடைகளின் குத்தகைதாரர்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் கடைகளில் குத்தகை அனுமதி காலம் 2016-ம் ஆண்டில் முடிவடைந்தது. அரசின் விதிகளை பின்பற்றியே வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அப்போது நீதிபதி, கட்டிடங்களின் வாடகை அதிகமாக இருப்பதாக மனுதாரர்கள் கருதினால் அவர்களின் கடைகளை பொது ஏலம் விட்டு ஒதுக்கீடு செய்யலாம். அந்த பொது ஏலத்தில் மனுதாரர்கள் பங்கேற்கலாம். சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்தே பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியும். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

பின்னர் தீர்ப்புக்காக வழக்கை பிப். 21-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x