Published : 13 Feb 2018 04:02 PM
Last Updated : 13 Feb 2018 04:02 PM

நான் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் இல்லீங்க, சக்கரை நோயாளிங்க: தாதா பினுவின் வாக்குமூலம்

‘சார் நான் அவ்வளவு ஒர்த் இல்லீங்க’, சுகர் பேஷண்டுங்க’ ,  என்று மக்களை மிரட்டிய தாதா பினு போலீஸில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து அரிவாளால் சினிமா பாணியில் கேக் வெட்டி கொண்டாடி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் தாதா பினு…

ஏ பிளஸ் பிரிவில் வகைப்படுத்தப்பட்ட ரவுடியான இவர் கொலை கொள்ளை ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என்று வலம் வந்தவர். 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருந்தாலும் உரிய சாட்சியின்றி தப்பித்தவர்…

கடந்த 6-ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போலீஸார் வளைத்து பிடிக்க முயற்சித்தபோது இவரும் கூட்டாளிகளும் தப்பிச்சென்றனர். இவர்களைப் பிடிக்கும் முனைப்பில் போலீஸார் ஈடுபட்டிருந்த நிலையில் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று காலை அம்பத்தூர் துணை ஆணையர் முன்பு சரணடைந்தார்.

மக்களை அச்சுறுத்தும் தாதா என்ற பெரிய ’கெத்துடன்’ கைதான பினு “சார் நான் அவ்வளவு ஒர்த் இல்லீங்க சுகர் பேஷண்டுங்க” “பிறந்த நாள் கொண்டாட கூப்பிட்டாங்க நம்பி போனேங்க சிக்க வச்சிட்டாங்க” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்…

அவரது வாக்கும்மூலம் வீடியோவாக வெளியாகி உள்ளது:

“ஐயா என் பேர் பினு, நான் பிறந்தது சென்னை, சூளைமேட்டில் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சூளைமேட்டில் தான். எனக்கு வயசு 50 ஆகுது. ஷுகர் பேஷண்ட். நான் கெட்ட சகவாசம் சேர்ந்து நிறைய ரவுடித்தனம் செய்து, நிறைய ஜெயில் வாசம் அனுபவித்து விட்டேன்.

வெளியில் வந்து திருந்தி வாழணும்னு ஓடி தலை மறைவாகிவிட்டேன். 3 வருஷமா தலைமறைவாக இருந்தேன். கரூரில் நான் இருந்த இடம் என் தம்பிக்கு மட்டும்தான் தெரியும். அவன் உனக்கு 50-வது பிறந்த நாள் வருது, நீ கொஞ்சம் சென்னைக்கு வா அண்ணா என்று கூப்பிட்டான்.

அவன் கூப்பிட்டதை வைத்து நானும் சென்னைக்கு வந்தேன். வந்த இடத்தில் இவன் சேர்த்து வச்ச ஆட்கள், மூன்று வருடம் ஆச்சே என்னைப்பார்த்து என்று எல்லோரும், எல்லா ரவுடிப்பசங்களும் வந்தார்கள். நான் கூட தம்பியிடம் ஏண்டா இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன்.

அப்ப என் தம்பி ஒன்றுமில்லை, அண்ணா நீ கேக் மட்டும் வெட்டி விட்டு போய்விடு என்று கூறினான். நான் அதை நம்பி கேக்கை வெட்டிட்டு, கிளம்பலாம் என்று முடிவு செய்யும் போதுதான் போலீஸ் ரவுண்டப் செய்து விட்டார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, நான் என்ன செய்வது என்று தெரியாமல், குதித்து எஸ்கேப் ஆகி ஓடிவிட்டேன்.

ஆனால் சென்னை போலீஸ் என்னை ரவுண்டப் செய்து எங்கே போனாலும் என்னை விடுவதாயில்லை. அதனால் என்னால் எதுவும் பண்ணமுடியல, அதனால் நானே இங்க நேரா வந்துட்டேன். எனக்கு மன்னிப்பு கொடுத்து விடுங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடியெல்லாம் கிடையாது.” இவ்வாறு பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x