Published : 13 Feb 2018 01:17 PM
Last Updated : 13 Feb 2018 01:17 PM

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாதா பினு: என்கவுன்ட்டர் பயத்தில் போலீஸில் சரண்

சென்னையை கலக்கிய ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேடப்பட்டு வந்த பிரபல தாதா பினு, என்கவுன்ட்டர் பயத்தில் தானாக அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார்.

கடந்த 6-ம் தேதி போலீஸார் வாகனச்சோதனையில் யதேச்சையாக ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி மதன் (எ) பல்லுமதன் போலீஸாரிடம் சிக்க, அவர் கொடுத்த தகவலின் பேரில் தாதா பினு தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தனது பிறந்த நாள் விழாவில் 'ஜிகர்தண்டா' படப் பாணியில் கேக் வெட்டிய தாதா பினுவுடன் 150-க்கும் மேற்பட்ட சென்னையின் ஏ-பிளஸ், ஏ, பி, சி கேட்டகிரி ரவுடிகள் கலந்துக்கொண்டனர். சில ஆர்வக்கோளாறு இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக போலீஸ் வரலாற்றில் இது போன்ற மெகா ரவுடிகள் வேட்டை நடந்ததில்லை. சினிமாவை மிஞ்சும் அனைத்துக் காட்சிகளும் அன்று நடந்தன. பூந்தமல்லியில் ஒதுக்குபுறமான லாரி ஷெட் ஒன்றில் மொத்தமாக கூடிய ரவுடிகள் மது அருந்தி, கும்மாளமிட்டு கேக் வெட்டினர். அப்போது பிறந்த நாள் கொண்டாடிய தாதா பினு அரிவாளால் கேக்கை வெட்டினார்.

பின்னர் வேறொரு இடத்தில் பிரியாணி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் போலீஸார் சுற்றி வளைத்து விட்டனர். இதில் பிறந்த நாள் கொண்டாடிய பினு உள்ளிட்டோர் தப்பிச் சென்றனர். 150 ரவுடிகளில் 73 பேர் மட்டுமே பிடிபட்டனர். மீதி ஆட்கள் தப்பிச் சென்றனர். இதில் பினுவும் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

மொத்தமாக 73 பேரை பிடித்தாலும் 80-க்கும் மேற்பட்டோரையும் குறிப்பாக பினு அவனது முக்கிய கூட்டாளி நாகு, விக்கி இருவரும் தப்பியது போலீஸார் மத்தியில் பெருத்த அவமானமாக உணரப்பட்டது. சினிமாவில் மட்டுமே ரவுடிகள் ஒன்றுகூடி கும்மாளமிடுவார்கள், ஆனால் நிஜ வாழ்க்கையில் காவல்துறையின் பல்வேறு உளவு, நுண்ணறிவு அமைப்புகளை மீறி ரவுடிகளுக்குள் தகவல் சென்று ஒன்று சேர்ந்து கொண்டாடியது காவல்துறையின் செயல்பாடு குறித்த விமர்சனத்தை எழுப்பியது.

இதையடுத்து சென்னையில் ஆட்டம் போடும் ரவுடிகள் பினு, அவரது கூட்டாளி விக்கி(எ) விக்னேஷ், நாகு (எ) நாகராஜ், அவர்களது பரம எதிரியான சிடி.மணி அவரது கூட்டாளியும் பினுவின் சாம்ராஜ்யத்தை கைப்பற்றியவருமான அரும்பாக்கம் ராதா (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என காவல்துறை மேலிடம் உத்தரவிட்டது.

தேவைப்பட்டால் சுட்டும் பிடிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டதாக தகவல் பரவியது. பின்னர் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தப்பி ஓடிய ரவுடிகளில் சிலர் பிடிபட்டனர். இதையடுத்து இன்று காலை முதலே ரவுடி ராதாகிருஷ்ணன் சரண் என்ற தகவல் பரவிய நிலையில் திடீரென தாதா பினு அம்பத்தூர் துணை ஆணையர் முன் சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பினுவின் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில் என்கவுன்ட்டருக்கு பயந்து மற்றவர்களும் சரணடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சென்னை அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x