Published : 13 Feb 2018 12:55 PM
Last Updated : 13 Feb 2018 12:55 PM

எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பாஜகவின் பினாமி அரசு என சிலர் விமர்சிப்பார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பாஜகவின் பினாமி அரசு என சிலர் விமர்சிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தை வழிநடத்திய மாபெரும் தலைவர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை சபாநாயகர் திறந்து வைத்ததில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரது நினைவு மண்டபம், நினைவு இல்லம் திறப்பு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

1992-ம் ஆண்டு எம்ஜிஆரின் உருவப் படத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். இப்போது ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழா, அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும், தமிழக மக்களும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட விழாவாக இருக்கும்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் பாஜகவுடன் கூட்டணி என்றும், பாஜகவின் பினாமி அரசு என்றும் சிலர் விமர்சிப்பார்கள். அதிமுகவின் செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிப்பார்கள். அழைக்காவிட்டால் ஏன் அழைக்கவில்லை என்ற கருத்தும் வரும். எப்படி செய்தாலும் விமர்சிப்பவர்கள் தொடர்ந்து ஏதாவது சொல்லி வருவார்கள். கிடப்பது கிடக்கட்டும் என்று எங்கள் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தமிழக அரசு உள்ளது. ஜெயலலிதாவின் புகழ் போற்றத்தக்க வகையில் அவர் வழியில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்வோம்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எல்லோரும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் ஜெயலலிதாவின் உருவப் படத்தை பேரவைத் தலைவர் மூலம் திறந்து வைத்தோம். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x