Last Updated : 13 Feb, 2018 12:56 PM

 

Published : 13 Feb 2018 12:56 PM
Last Updated : 13 Feb 2018 12:56 PM

பட்டமளிப்பு விழாவுக்கு ரூ. 6 லட்சம் வசூல்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் 4 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 6 பல்கலைக்கழக கல்லூரிகளில் பயிலும் 1,227 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குவதற்காக தலா ரூ.500 வீதம் ரூ.6.13 லட்சம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. 5 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விழாவில், தண்ணீரும், உணவும் இல்லாமல் மாணவ, மாணவிகள் பலர் சோர்வடைந்தனர்.

இப் பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

இவ்விழாவில் மாணவர்களிடம் ரூ.500 வசூல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. புகைப்படம், விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு குறுந்தகடு மற்றும் இவற்றை தபாலில் அனுப்ப ஆகும் செலவு என்று ரூ.500 வசூலித்ததாக பல்கலைக்கழக நிர்வாகம் பின்னர் விளக்கம் அளித்தது.

பேராசிரியர் கேள்வி

இந்நிலையில், நேற்று நடைபெற்ற விழாவுக்கும், ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.500 வசூல் செய்யப்பட்டது. பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்த மாணவ, மாணவியர் முகவாட்டத்துடனும் உற்சாகமின்றியும் இருந்தனர். ``நீங்கள் ஏன் சந்தோஷமாக இல்லை, இது உங்களுக்கான நாளல்லவா?” என்று, பட்டமளிப்பு விழா உரையின்போது பல்கலைக்கழக நிதிநல்கை குழு முன்னாள் தலைவர் வேத் பிரகாஷ் கேட்டார். அப்போது கூட யாரும் உற்சாக மடையவில்லை.

மாணவி ஒருவரிடம் பேசியபோது, புகைப்படம், சிடிக்கு என்று ரூ.500 வாங்கியுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அதிகாலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு வந்துள்ளோம். காலை 8 மணிக்கெல்லாம் விழா அரங்குக்குள் அமரவைத்துவிட்டனர். காலை உணவு தரவில்லை, தண்ணீர்கூட தரவில்லை. இதனால் பல மாணவிகள் சோர்வடைந்தனர், என்று தெரிவித்தார்.

மாணவ, மாணவியர் பிற்பகல் 2 மணிக்கு பின்னரே விழா அரங்கிலிருந்து வெளியேற முடிந்தது.இவர்களுக்கு தண்ணீர்கூட தராததுதான் ஏமாற்றம் என்று பெற்றோர்கள் புலம்பியதைக் கேட்கமுடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x