Published : 13 Feb 2018 12:53 PM
Last Updated : 13 Feb 2018 12:53 PM

தூத்துக்குடி அருகே கோவளம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின: உரத்தொழிற்சாலை மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே கோவளம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் கடலில் திறந்து விடப்பட்டதாலேயே மீன்கள் இறந்ததாக மீனவர்கள் குற்றஞ் சாட்டினர். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கத் தொடங்கின. முதலில் இதை சாதாரண நிகழ்வாக கருதிய மீனவர்கள், பின்னர் மொத்தமாக மீன்கள் இறந்து ஒதுங்கியதால் அதிர்ச்சியடைந்தனர். நேற்று காலை வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பன்னா, சாளை, ஊளி, வெள மீன், பாறை உள்ளிட்ட வகையை சேர்ந்த சிறிய மீன்கள் முதல் சுமார் 3 கிலோ எடையிலான ஆயிரக்கணக்கான மீன்கள் கடற்கரை பகுதியில் இறந்து கிடந்தன.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் பாலசரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவளம் கடற்கரையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அதிகளவில் மீன்கள் இறந்து, கரை ஒதுங்கியுள்ளன. இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இறந்து கிடக்கும் மீன்கள் மற்றும் அப்பகுதி கடல்நீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிக்கு அனுப்பியுள்ளோம். மீன்வளக் கல்லூரி சார்பிலும் தனியாக மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு பிறகே மீன்கள் மொத்தமாக இறந்து கரை ஒதுங்கியதற்கான காரணம் தெரியவரும்’’ என்றார் அவர்.

தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் நேற்று கோவளம் கடற்கரைக்கு வந்து, இறந்து கரை ஒதுங்கிய மீன்களை ஆய்வு செய்து, மாதிரிகளை எடுத்து சென்றனர்.

ரசாயனக் கழிவுகள் கலப்பு

கோவளம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனக் கழிவுகள் கடலில் கலந்ததால் தான் மீன்கள் மொத்தமாக இறந்து கரை ஒதுங்கியுள்ளன என மீனவர்கள் குற்றஞ் சாட்டினர்.

இதுகுறித்து கோவளத்தை சேர்ந்த மீனவர் முருகன் கூறும்போது, ‘‘கோவளம் கடற்கரையில் இருந்து புன்னைக்காயல் கடற்கரை வரை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு டன் கணக்கில் மீன்கள் இறந்து, கரை ஒதுங்கியுள்ளன. தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவுகள் கடலில் கலந்ததால் தான் மீன்கள் மொத்த, மொத்தமாக இறந்து கரை ஒதுங்கியுள்ளன. எனவே, ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கூறும்போது, ‘‘கோவளம் கடற்கரையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது குறித்து மீன்வளத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x