Published : 13 Feb 2018 12:56 PM
Last Updated : 13 Feb 2018 12:56 PM

ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி சவிதா: அரசுப் பள்ளி ஆசிரியையும் தேர்வு

மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவி ஜப்பான் செல்லத் தேர்வாகியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடும், கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

மலைக்காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, சிறந்த கல்வியைக் கொடுப்பதுடன், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், நகரப் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு இணையாகச் செயல்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைக்கும் இந்தப் பள்ளியில், பழங்குடியின மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுத் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி, சிறப்பு வகுப்புகள், அதிகாலையிலேயே பெற்றோருடன் கலந்துரையாடல் உள்ளிட்டவை இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்கள். இதனால், பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இந்தப் பள்ளியை நாடி வருகின்றனர். வன விலங்குகள் நடமாட்டமுள்ள மலைக் கிராமங்களில் இருந்து வரும் சில மாணவ, மாணவிகள், பில்லூர் அணையின் நீர்த்தேக்கத்தை பரிசல்கள் மூலம் கடந்து பள்ளிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்லவதற்கு இந்தப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவி ஒருவரும், ஆசிரியை ஒருவரும் தேர்வாகியுள்ளனர்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 96 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழகத்தில் இருந்து 5 மாணவர்களும், ஓர் ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி எம்.சவிதா,இயற்பியல் ஆசிரியை ஆர்.மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி சவிதா கூறும்போது, ‘நான் தமிழக- கேரள எல்லையை ஒட்டியுள்ள காளியப்பனூர் என்ற மலைக் கிராமத்தில் இருந்து தினமும் 20 கிலோ மீட்டர் பயணித்து, வெள்ளியங்காடு அரசுப் பள்ளிக்கு கல்வி கற்க வருகிறேன். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்றேன். அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றதால், அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலாவுக்காக ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கிராமம் மட்டுமின்றி, சுற்றியுள்ள மலைக் கிராம மக்கள் மிகுந்த ஆச்சரியம், ஆனந்தமடைந்துள்ளனர்.

இதற்கு எனது ஆசிரியர்கள், பெற்றோரே காரணம். இந்த வாய்ப்பு பழங்குடியின மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்’ என்றார்.

இந்த திட்டத்தில், தமிழகத்திலிருந்து தேர்வான ஒரே ஆசிரியையான மகேஸ்வரி கூறும்போது, ‘பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே ஆர்வமுடன் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் சரியாகத் திட்டமிட்டும், ஒருங்கிணைந்தும் பாடங்களை கற்றுத் தருகிறோம். மலைக் கிராமத்தில் இயங்கும் பள்ளியின் ஆசிரியையான என்னை, ஜப்பான் செல்ல தேர்வு செய்துள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தூண்டுகோலாக அமையும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x