Published : 13 Feb 2018 12:56 PM
Last Updated : 13 Feb 2018 12:56 PM

கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் தும்பா விண்வெளி ஆய்வு மையத்துக்கு பயணம்: அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் செயல்வழிக் கற்றல் திட்டம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் 100 மாணவர்கள் கோவையில் இருந்து விக்ரம்சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவியல், கணிதம் சார்ந்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்ளவும், அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும் நேரடியாக களத்துக்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்திட்டம் நடப்பாண்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா - விக்ரம்சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

மாணவருக்கு தலா ரூ.2000 என்ற வகையில் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று, இரண்டு நாள் கல்விச் சுற்றுலாவாக மாணவர்கள் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆசிரியர்கள் மேற்பார்வையில் 100 மாணவர்களும் ரயில் மூலம் சென்றனர்.

உயர் ரக ஆய்வு மையம்

அறிவியல் கல்வி சுற்றுலா குறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, ‘ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் திட்டத்தில் மாணவர்களின் கணித, அறிவியல் திறன்களை மேம்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கும், அறிவியல் ஆய்வு மையங்களுக்கும் நேரில் அழைத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் மேம்படுத்த வேண்டுமென நிதி ஒதுக்கி ஊக்குவிக்கப்படுகிறது.

அத்திட்டத்தின் கீழ் கோவையில் 15 அரசு பள்ளிகளில் இருந்து தலா 100 மாணவர்கள் என மொத்தம் 1500 மாணவர்களை தனித்தனியாக கோவையில் உள்ள உயர்கல்வி, அறிவியல் ஆய்வு மையங்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பணிகளையும், ஆராய்ச்சிகளையும் தெரிவித்துள்ளோம். அத்திட்டத்தின் அடுத்தகட்டமாகவே வெளியூர்களில் உள்ள உயர் ரக ஆய்வு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். திறனாய்வுத் தேர்வில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களை, அவர்களது ஆர்வத்தின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்து அழைத்துச் செல்கிறோம்’ என்றனர்.

ஆசிரியர்கள் கூறும்போது, ‘தும்பா விண்வெளி ஆய்வு மையத்தில், வானவியல் தொடர்பான ஆய்வுகள், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்டவை இருப்பதால் அந்த தகவல்கள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். சிறந்த செயல்வழிக் கற்றலாக இந்த பயணம் அமையும்’ என்றனர். அறிவியல் சுற்றுலா செல்லும் 100 மாணவர்களும் பிப்.15-ம் தேதி கோவை வந்தடைகின்றனர். ரயில்வே துறை இவர்களுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x