Published : 13 Feb 2018 12:05 PM
Last Updated : 13 Feb 2018 12:05 PM

மெல்ல குணமடைந்து வருகிறார் தன்யஸ்ரீ

சென்னை தண்டையார்பேட்டையில் குடிபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்யஸ்ரீ மெல்ல குணமடைந்து வருகிறார்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் தனது பேத்தி தன்யஸ்ரீயை (வயது 4) அழைத்துக் கொண்டு வீட்டருகே இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி, தன்யஸ்ரீயின் மீது விழுந்தார். இதில் படுகாயம் ஏற்பட்ட தன்யஸ்ரீ உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின் அங்கிருந்து க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்டார்.

தன்யஸ்ரீயின் மருத்துவ சிகிச்சைக்காக ஏரளமான நல்ல உள்ளங்கள் பண உதசி செய்தனர். இந்த நிலையில் தன்யஸ்ரீ மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தீவிர பிரிவு மருத்து ஆலோசகர் ஒருவர் கூறும்போது, "தன்யஸ்ரீயின் ரத்த அழுத்தம், சுவாச மட்டம் சீரான நிலையில் உள்ளது. தன்யஸ்ரீக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் அவரது கணுக்கால், எலும்புகளிலும் முறிவு ஏற்பட்டிருந்தது. மூளையில் தன்யஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது மெல்ல அவர் குணமடைந்து வருகிறார். அவரது தலையில் மிருதுவான ஹெல்மெட் ஒன்று அணிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தன்யஸ்ரீ உடல் நலம் குறித்து அவரது தந்தை ஸ்ரீதர் கூறும்போது, "நாங்கள் சில நாட்கள் கவலையாகத்தான் இருந்தோம். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்யஸ்ரீ எங்களை அடையாளம் கண்டு கொண்டாள்.

பிற நாடுகளிலிருந்தும் எங்களுக்கு உதவ அழைப்பு வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருமுறை இங்கு வந்திருந்தார். மேலும் அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து சிகிச்சையும் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

எனது மகளின் சிகிச்சைக்காக  பண உதவி புரிந்தவர்களுக்கும், பிரார்த்தனை செய்தவர்களுக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x