Published : 13 Feb 2018 11:47 AM
Last Updated : 13 Feb 2018 11:47 AM

காவிரி நீரை பெற்றுத் தர உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு வாசன் வலியுறுத்தல்

தமிழக முதல்வர், கர்நாடகாவில் இருந்து காவிரி நதிநீரைப் பெற்று சம்பா பயிர்களையும், தமிழக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு முறையாக திறந்துவிடவில்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி தண்ணீரை திறந்து விடாத காரணத்தால் தமிழகத்தில் விவசாயம் நடைபெறுவதற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசு முன்வரவில்லை. இதனை ஏன் என்று கேட்கவும் மத்திய பாஜக அரசு தயாராக இல்லை. இதற்கெல்லாம் காரணம் கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய பாஜக அரசு ஆகியவற்றின் அரசியல் கண்ணோட்டமே. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து இரண்டு அரசும் நாடகம் நடத்துகிறது.

இச்சூழலில் தமிழக அரசு, கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுவது காலம் தாழ்ந்து எடுத்த நடவடிக்கையாகும். குறிப்பாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்காமலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் செயல்படுகின்ற கர்நாடக அரசு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைப்பதை இனியும் தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

உடனடியாக தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரை சந்திக்க தீவிர முயற்சி எடுத்து, தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 டி.எம்.சி. தண்ணீரையாவது திறந்துவிட வற்புறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி, முக்கிய முடிவு எடுத்து, ஒன்றுகூடி டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும். அதுவும் இல்லையென்றால் தமிழக முதல்வர் உடனடியாக டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்து வேண்டும்.

இப்படி தமிழக முதல்வர் உடனடியாக எடுக்கும் மிக முக்கிய நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்திற்கு காவிரி நதியில் இருந்து தண்ணீர் கிடைக்கப் பெற்றால்தான் சுமார் 10 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் லட்சக்கணக்கான விவசாயிகளையும் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் ஏற்கெனவே விவசாயத்தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்திருக்கின்ற விவசாயிகள் சம்பா பயிர் விளைச்சலையும் பெற முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் சம்பா பயிர் செய்திருக்கின்ற விவசாயிகள் தற்போது போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் உடனடியாக நல்ல முடிவு எடுத்து, செயல்பட்டு காலம் தாழ்த்தாமல் கர்நாடகாவில் இருந்து காவிரி நதிநீரை பெற்று தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x