Published : 13 Feb 2018 11:27 AM
Last Updated : 13 Feb 2018 11:27 AM

முதலீடு வராத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது: ராமதாஸ்

பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மத்தியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை பார்க்கும் போது பெருமிதத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதன்மை தேவை கட்டமைப்பு மேம்பாடும், தொழில் வளர்ச்சியும்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதுதான் சிறந்த வழி என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தாலும் கூட, அது கடமைக்கு விளம்பரம் தேடும் நிகழ்ச்சியாக மட்டுமே அமைகிறது. இதனால் யாருக்கு பயன் கிடையாது.

முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்த மாநாடு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்த ஜெயலலிதா முதல்வராக்கப்பட்ட பிறகுதான் நடத்த வேண்டும் என்பதற்காக 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள அளவில் எந்த விதமான தொழில் வளர்ச்சியோ, வேலைவாய்ப்பு பெருக்கமோ ஏற்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட ரூ.2.42 லட்சம் கோடியில் ரூ.62,738 கோடி மதிப்பிலான முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் இருப்பதாகவும், இத்திட்டங்களின் மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 100 நாட்களில் அதாவது 2016-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி 7 திட்டங்கள் நிறைவடைந்து விட்டதாகக் கூறி அவற்றை ஜெயலலிதா திறந்து வைத்தார். அவற்றின் மதிப்பு ரூ.10,054 கோடி ஆகும். உலகில் எந்த நாட்டிலும் 100 நாட்களில் ரூ.10,054 கோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக வரலாறு இல்லை. ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களை புதிய திட்டங்களாக கணக்குக் காட்டித் தான் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போதிலிருந்தே இதுபோன்ற புள்ளிவிவரங்களை அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை சரியான புள்ளிவிவரங்கள் என்றால் அதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என்று வினா எழுப்பினால் அதற்கு மட்டும் அரசிடமிருந்து விடை கிடைப்பதே இல்லை.

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளின் உண்மை நிலை என்னவென்றால், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த மொத்த முதலீடுகளின் அளவு ரூ.32,702 கோடி மட்டும்தான். இதிலும் கூட ரூ.19,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிலம் சார்ந்த பல்வேறு சர்ச்சைகளால் இன்னும் செயலாக்கம் பெறவில்லை. அதனால் இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி மட்டும்தான். இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் வெறும் 5.34 விழுக்காடு மட்டும் தான். அதுமட்டுமின்றி, தமிழக அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் மின் உற்பத்தித் துறையில் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு செய்யும் திட்டத்தை பெரு நிறுவனங்கள் கைவிட்டு விட்டன. தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு படுதோல்வி அடைந்து விட்டது என்பதை உறுதி செய்ய இந்த ஆதாரங்களே போதுமானவை ஆகும்.

2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்று கூறப்பட்டாலும் உண்மையில் ரூ.300 கோடிக்கும் கூடுதலாக செலவானது. ஆனால், அதற்கேற்ற பயன் இல்லை. கடந்த தொடக்கத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இதுவரை 60 விழுக்காட்டுக்கும் கூடுதலான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. அதனால் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு என்றால் அதுபோல நடத்தப்பட வேண்டும். மாறாக பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறாகும்.

தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய தொழில்திட்டங்களுக்கு விண்ணப்பித்த 3 வாரங்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஊழல் என்பது இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும். அத்தகைய நிலையை இன்னும் சில ஆண்டுகளில் பாமக ஏற்படுத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x