Published : 13 Feb 2018 10:26 AM
Last Updated : 13 Feb 2018 10:26 AM

பல்கலைக்கழகங்களின் முறைகேடுகளை விசாரிக்க உயர்கல்வித் துறை முடிவு: சென்னையில் வரும் 16-ம் தேதி அவசரக் கூட்டம்

பாரதியார் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு குற்றச்சாட்டைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு விவகாரங்களை விசாரிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் அவசர கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரின் தகுதி காண் பருவத்தை நிறைவு செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் துணைவேந்தர் ஆ.கணபதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் தர்மராஜ் கைதானார். தொலைதூரக் கல்வி மைய இயக்குநராக இருந்த மதிவாணன் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கவும், வழிநடத்தவும் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில்பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவே தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தைப் போலவே தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களிலும் பணிநியமன முறைகேடுகளை விசாரிக்க வேண்டுமெனவும், துணைவேந்தர் நியமனத்தை முறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தல்கள் எழுந்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் அலுவலகமும் இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுவதால், உயர்கல்வித்துறை சார்பில் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசியல் அழுத்தங்களைத் தாண்டி நடவடிக்கை இருக்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர்களுடனான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பல்கலைக்கழகங்கள் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விவாதிக்கவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல், மாதந்தோறும் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு சம்பவத்தின் எதிரொலியாக, தற்போது அவசரக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பல்கலைக்கழக நிர்வாகமும் பணி நியமனம், சஸ்பெண்ட் நடவடிக்கை, தணிக்கைத் தடை விவரங்களை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளரும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து குவியும் புகார்கள்

இதனிடையே பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைக்காமல், பணி நியமன முறைகேடு புகார் தெரிவித்தவர்கள், தங்கள் தரப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளித்து வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விண்ணப்பதாரர் ஒருவர் கூறும்போது, ‘இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்குவது என்ற விதி மீறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த முரண்பாடான தகவல்கள், மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த புகார்கள், நீதிமன்ற வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். போலீஸ் விசாரணையின்போது அனைத்தையும் சமர்ப்பிப்போம்’ என்றார்.

வாரம் ஒருமுறை ஆய்வு

பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகக்குழு தலைவர் என்ற முறையில் வாரம் ஒருமுறை பணிகளை ஆய்வு நடத்த உள்ளதாக சுனில் பாலிவால் தெரிவித்தார். அதன்படி 14-ம் தேதி (நாளை) பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக செலவினங்களுக்கு நிர்வாகக்குழுவில் இடம் பெற்றுள்ள 2 உறுப்பினர்களும் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே வழங்க முடியும். நிர்வாகக்குழு தலைவர் மட்டுமே அதிக நிதியை வழங்க முடியும் என்பதால், அவரது வருகை அவசியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x