Published : 13 Feb 2018 10:21 AM
Last Updated : 13 Feb 2018 10:21 AM

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: தென் மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - 10 நாட்களுக்கு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக தகவல்

புதிய டெண்டர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு ஆதரவாக கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து காஸ் டேங்கர் லாரிகள் மூலம் சமையல் காஸ் கொண்டு செல்லப்பட்டு பாட்டிலிங் பிளாண்டுகளில் நிரப்பப்படுகின்றன. இதற்காக காஸ் டேங்கர் லாரிகள் எண்ணெய் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை ஒப்பந்த காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. மேலும், மண்டல அளவில் நடத்தப்பட்ட டெண்டர் முறை மாற்றப்பட்டு, மாநில அளவில் நடத்தப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்தது.

மாநில அளவில் டெண்டர் விடப்பட்டால், பிற மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது. இதனால், வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மண்டல அளவில் டெண்டர் விட வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை முதல் தென்மண்டல அளவிலான காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தால் 4,200 காஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர். இப்போராட்டம் தொடர்ந்து நீடித்தால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாகியுள்ளது.

கிழக்கு மண்டலம் ஆதரவு

போராட்டம் குறித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கச் செயலாளர் கார்த்திக் கூறியதாவது:

மத்திய அரசு தரப்பிலோ, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலோ இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எங்களின் பிரதான கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் உள்ள மண்டல அளவிலான டெண்டர் தொடர வேண்டும் என்பதுதான். எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.

தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து, கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த மண்டலத்தில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார்.

10 நாட்களுக்கு கிடைக்கும்

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

மாநில அளவில் வாடகை டெண்டர் என்பது, மத்திய அரசின் கொள்கை முடிவு. இதன்படி டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் மொத்தம் 47 பாட்டிலிங் மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மையங்களில் இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை எரிவாயு இருப்பு உள்ளது.

இங்கு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் வேலைநிறுத்தம் நீடித்தாலும் மேலும் 10 நாட்கள் வரை சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் கோவை பகுதிக்கு பெரும்பாலும் சரக்கு ரயில் வேகன்கள் மூலமே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வேலைநிறுத்தம் ஒரு மாத காலம் நீடித்தாலும், சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பாரத் பெட்ரோலியம் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் கூறும்போது, ‘சமையல் காஸ் ஏஜென்ஸிகளில் 2 நாட்களுக்கு தேவையான காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது. லோடு வருவதிலும் தடையில்லை. வேலைநிறுத்தம் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேல் நீடித்தால் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

போராட்டத்துக்கு ஆதரவு

காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை புதிதாக கொண்டு வரும்போது, அந்த தொழிலில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும். டேங்கர் லாரி ஒப்பந்த (டெண்டர்) முறையில் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று மத்திய அரசு சொல்வது நியாயமில்லாத தாகும்.

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்குள், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x