Published : 13 Feb 2018 10:31 AM
Last Updated : 13 Feb 2018 10:31 AM

பேரவையில் ஜெ. படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மறுப்பு: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மறுத்துவிட்டதால் பேரவைத் தலைவரை வைத்து திறந்துள்ளனர் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் நேற்று ஆய்வு நடத்தினார். முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் முதல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா. எனவேதான், சட்டப்பேரவையில் அவரது உருவப்படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தோம். படத் திறப்பு விழாவையும் புறக்கணித்தோம். சட்டத்துக்கு புறம்பான இந்தச் செயல் குறித்து நீதிமன்றத்திலும் முறையிட்டுள் ளோம்.

ஜெயலலிதாவின் படத்தை திறக்க குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரை தமிழக அரசு அணுகியது. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பதால் ஜெயலலிதா படத்தை திறக்க அவர்கள் மூவரும் மறுத்துவிட்டனர். அதனாலேயே அவசர அவசரமாக பேரவைத் தலைவர் பி.தனபாலை வைத்து ஜெயலலிதா படத்தை திறந்து வைத்துள்ளனர்.

சட்டப்பேரவையில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அந்த அளவுக்கு அவர் தகுதி படைத்த தலைவர் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் வராதது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x