Published : 13 Feb 2018 10:07 AM
Last Updated : 13 Feb 2018 10:07 AM

மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் பிப்.16-ல் தீர்ப்பு

டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளிநாடு செல்ல தன்னை அனுமதிக்கக்கோரி லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் வரும் 16-ம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக்கூறி அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் 16 மற்றும் ஜூலை 28 ஆகிய தேதிகளில் அவருக்கு எதிராக இரண்டு லுக்-அவுட் நோட்டீஸ்களை சிபிஐ பிறப்பித்தது.

இந்த நோட்டீஸை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லுக்-அவுட் நோட்டீஸூக்கு தடை விதித்தார். இத்தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. கார்த்தி சிதம்பரம் மீதான லுக்-அவுட் நோட்டீஸுகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இருப்பினும், அவரது மகளின் கல்வி நிமித்தமாக இங்கிலாந்து செல்ல அனுமதி அளித்தது.

இந்நிலையில் டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் இரண்டாவது முறையாக பிப்.15 முதல் பிப்.28 வரையிலும், மூன்றாவது முறையாக மார்ச் 20 முதல் மார்ச் 31 வரையிலும் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டுமெனக்கோரி கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் குடியுரிமைத்துறை, உள்துறை அமைச்சகம், சிபிஐ ஆகியோர் பிப்.12-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதிடுகையில், “சிபிஐ விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகி, ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக வெளிநாடுகள் செல்லவே அவர் அனுமதி கோரியிருக்கிறார். அவர் திரும்ப வரவேமாட்டார் என்று சிபிஐ கருதுவதில் எந்த நியாயமும் இல்லை. ஏனென்றால் அவரது குடும்பம் இங்குதான் இருக்கிறது. எனவே சிபிஐ அவ்வாறு கருதத் தேவையில்லை” என்றார்.

மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் வாதிடுகையில், “மருத்துவத்துக்காகவோ, குழநதையின் கல்விக்காகவோ கார்த்தி சிதம்பரம் போகவில்லை. வணிக ரீதியாகவே அவர் செல்கிறார். அதனால் அவர் பிரதான வழக்கு முடியும் வரை காத்திருக்கலாம். வெளிநாடு சென்றால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. சுயநலனா அல்லது பொதுநலனா என்று பார்த்தால் பொதுநலன்தான் முக்கியம். பிரதான வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது” என்றார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “இந்த இடைக்கால மனு மீது வரும் 16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும். லுக்-அவுட் நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரும் பிரதான வழக்கு மீதான விசாரணை வரும் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x