Published : 13 Feb 2018 09:59 AM
Last Updated : 13 Feb 2018 09:59 AM

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து மீண்டும் 15-ம் தேதி பேச்சுவார்த்தை

மின் வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, வரும் 15-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின் வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015 டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 27 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்நிலையில், பிப்.12-க்குள் மின் வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தொழிலாளர் நல துணை ஆணையர் உறுதியளித்தார். ஆனால், ஊதிய உயர்வு தொடர்பாக எந்த முயற்சியும் அரசு தரப்பில் இருந்து எடுக்காததால், வரும் 16-ம் தேதி மின் வாரிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இந்நிலையில், சென்னையில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சுமதி முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் நிர்வாகத் தரப்பில் ஊதிய உயர்வுக் குழுத் தலைவர் மனோகரன் தலைமையில் அதிகாரிகளும், சிஐடியு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 10 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை குறித்து, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க, அதிகாரிகள் கடந்த அக். 21-ல் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகும், ஊதிய ஒப்பந்தம் ஏற்படாததால் ஜன. 23-ல் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்தோம். இதற்கிடையே, ஜன. 22-ல் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப். 12-க்குள் ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படும் என மின் வாரியம் உறுதி அளித்தது. இந்நிலையில், பிப்.12-க்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு திடீரென இடைக்கால நிவாரணம் அறிவிப்பது சரியல்ல. மேலும், நிதித் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, முன்பு ஒப்புக்கொண்ட 2.57 மடங்குக்கு பதிலாக 2.40 மடங்குக்கு குறைவாக ஊதிய உயர்வு வழங்கவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. எனவே, மின் வாரியத்தை கண்டித்து பிப். 16-ல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தோம்.

இந்நிலையில், இன்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் ஊதிய உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. அவர்கள் மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். எனினும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரும் 15-ம் தேதி மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம். அன்றைய தினமும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால் பிப். 16 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x