Published : 13 Feb 2018 09:44 AM
Last Updated : 13 Feb 2018 09:44 AM

தமிழகத்தில் உள்ள கோயில்சொத்துகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்: தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கோயில் சொத்துகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்க அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநயினார் கோயிலுக்கு சொந்தமாக வாசுதேவநல்லூரில் உள்ள நிலங்களை மீட்டு, பொது ஏலம் நடத்தக் கோரி வி.முத்துசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

14 பேருக்கு விற்பனை

இந்த மனுவில், ‘சங்கரநயி னார் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் 62 சென்ட் நிலம் வாசுதேவநல்லூரில் உள்ளது. இந்த நிலம் சாகுல்அமீது என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த நிலத்தை பதிவு செய்யப்படாத விற்பனை பத்திரம் மூலம் 14 பேருக்கு விற்பனை செய்துள்ளார். அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கோயில் நிலத்துக்கு மிகக் குறைவாகவே வாடகை செலுத்தி வருகின்றனர். இதனால் இந்த நிலத்தை மீட்டு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து பொது ஏலம் நடத்த வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிஆர்.மகாதேவன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

மத வழிபாடு தலங்களின் சொத்துகள், குறிப்பாக கோயில் நிலங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அந்த நிலங்களில் இருந்து வரும் வருமானம் கோயிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. இந்த விஷயத்தில், கோயில்களுக்கு எதற் காக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன என்பதை மனதில் வைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால், தமிழகத்தில் கோயில்களுக்காக நமது முன் னோர் வழங்கிய நிலங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலரான அறநிலையத் துறை அப்பணியை சரியாக மேற்கொள்ள வில்லை.

சொத்துகளை மீட்கவேண்டும்

எனவே சங்கரநயினார் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோயில் நிலங்களை அனுபவித்து வருபவர்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் 2 வாரத்தில் நோட்டீஸ் அனுப்பி, வாடகை பாக்கியை 4 வாரங்களில் செலுத்த உத்தரவிட வேண்டும். அதன் பிறகும் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் இருந்து கோயில் சொத்துகளை உடனடியாக மீட்க வேண்டும்.

அறநிலையத் துறை சட்டப்படி கோயில் நிலங்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு நிர்ண யம் செய்யும் வாடகையை ஏற்கும் குத்தகைதாரர்கள் தொடரவும், வாடகையை ஏற்காத குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலத்தை மீட்டு, அந்த நிலங்களை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 வாரத்தில் அறிக்கை தாக்கல்

தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு வழங்கப்பட்ட கோயில் நிலங்களின் பட்டியலை அறநிலையத் துறை ஆணையர் 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அறநிலையத் துறை பகுதி, மண்டலம் வாரியாக குழு அமைத்து, குழு உறுப்பினர்களை அனைத்து கோயில்களுக்கும் அனுப்பி கோயில் நிலங்களை அடையாளம் காணவும், அந்த நிலங்களை அனுபவித்து வருபவர்கள், வாடகை பாக்கி விவரங்களைக் கண்டறிந்து 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் குழு வாடகை பாக்கி விவரம், வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும். வாடகை பாக்கியை வசூலிப்பதிலும், சொத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதிலும் தவறிய அதிகாரி கள் மீது 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் வருமானங்களை திவ்யபிரபந்தம், தேவாரம் பிரசங்கம் செய்யவும், பல்கலைக்கழகம், கல்லூரி தொடங்கவும் பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள வருவாயை வருமானம் குறைந்த கோயில்களின் பராமரிப்புக்கு செலவிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x