Published : 13 Feb 2018 09:10 AM
Last Updated : 13 Feb 2018 09:10 AM

ரூ.176 கோடியில் உருவாக்கப்பட்டது: பத்திர பதிவை எளிதாக்கும் ‘ஸ்டார் 2.0’ திட்டம் தொடக்கம் - முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

பொதுமக்கள் தங்களது ஆவணப்பதிவு தொடர்பான தேவைகளை விரைவில் பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையில், ரூ.176 கோடியே 44 லட்சம் மதிப்பில் ‘ஸ்டார் 2.0’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தையும், பதிவுத்துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் (www.tnreginet.gov.in) முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இத்திட்டம் மூலம், பொதுமக்கள் தாங்களாகவே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்னரே, இணையவழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, அலுவலக வருகைக்கு முன்பதிவு செய்யும் வசதி, ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து திரும்ப வழங்குதல் உள்ளிட்ட வசதிகளைப் பெறமுடியும்.

மேலும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக, உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவித்தல், மோசடி பத்திரப்பதிவுகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரது கைரேகையை ஒப்பிட்டு ஆள்மாறாட்டத்தை தடுத்தல், கட்டணமில்லா தொலைபேசி வழியாக பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், பதிவுக்குப் பிறகு பட்டா மாறுதல் மனுக்களை இணைய வழியாக உடனுக்குடன் வருவாய்த் துறைக்கு அனுப்பி, பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய நடைமுறை ஆகியவை இந்த புதிய மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பதிவுத்துறை செயலாளர் ச.சந்திரமவுலி, பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனிலேயே பட்டா

பதிவின்போதே பட்டா மாறுதல் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு நிலம் தொடர்பான பதிவு நடக்கும்போது, நிலத்தை விற்பவர் பட்டா மாற்றத்துக்கான விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, நிலத்தை வாங்குபவரிடம் கொடுத்துவிடுவார். இதை, சார்பதிவாளரும் பதிவு செய்து, பரிந்துரைப்பார். பிறகு, அந்த ஆவண நகல் மற்றும் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.

இதில், சம்பந்தப்பட்ட மனு எங்கு, எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவது சிரமம். ஆனால், தற்போது பதிவு முடிந்தவுடன், பதிவுக்கான மென்பொருளிலேயே பட்டா மாறுதலுக்கான பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பட்டா மாறுதல் விண்ணப்பம், ஆவணம் தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலருக்கு சென்றுவிடும். சொத்து வாங்கியவருக்கு இதுகுறித்த குறுஞ்செய்தி, மின்னஞ்சல் சென்றுவிடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது என்றால், அந்த தகவலும் நில உரிமையாளருக்கு வந்துவிடும். இதன்மூலம் ஆன்லைனிலேயே பட்டாவை பெற முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x