Published : 13 Feb 2018 09:07 AM
Last Updated : 13 Feb 2018 09:07 AM

சென்னையில் 2019-ம் ஆண்டு ஜன. 23, 24-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் வரும் 2019-ம் ஆண்டு ஜன.23 மற்றும் 24 தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அதன் பின்னரும் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் இவற்றால் முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிப்போனது.

விரிவாக ஆலோசனை

இந்நிலையில், கடந்த மாதம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், முதல்வர் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நிலவும் அமைதியான சட்ட ஒழுங்கு சூழல், தடையற்ற மின்சாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் திறன்மிக்க மனித ஆற்றல் ஆகியவை தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். இவை உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரூ.62,738 கோடி முதலீடு

பல நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாக பங்கேற்றன. இதில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், இதுவரை 61 நிறுவனங்கள் ரூ.62,738 கோடி முதலீடு செய்து, பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

முதல் மாநாட்டுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 2-வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. இம்மாநாட்டை நடத்த ரூ.75 கோடியை முதல்வர் கே.பழனிசாமி ஒதுக்கியுள்ளார்.

மாநாட்டை சிறப்பாக நடத்தி தமிழகத்தை வளர்ச்சி்ப் பாதையில் தொடர்ந்து கொண்டுசெல்ல, அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள், தூதரகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x