Published : 13 Feb 2018 08:49 AM
Last Updated : 13 Feb 2018 08:49 AM

ஜெயலலிதா படத் திறப்புக்கு ஆதரவு: விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க காங். முடிவு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று திறந்து வைத்தார். ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பதால் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விழாவையும் புறக்கணித்தன.

ஜெயலலிதா படத் திறப்புக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ‘‘சட்டப்பேரவையில் நடைபெறும் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள்’’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்று காலை விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்துக்கு வந்த விஜயதரணி, முதல்வர் கே.பழனிசாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா படம் திறந்ததற்காக பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். கட்சியின் முடிவுக்கு எதிரான அவரது இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விஜயதரணியிடம் கேட்டபோது, ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவித்தபடி நான் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் 10 தலைவர்களின் படங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஆண்கள். முதல் முறையாக பெண் தலைவரின் படம் வைக்கப்படுவதால் அதனை நான் வரவேற்கிறேன்.

ஒரு பெண்ணாக அரசியல் பல்வேறு தடைகளைத் தகர்த்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர்.

பெண் தலைவர் என்ற முறையிலேயே ஜெயலலிதா படத் திறப்பை ஆதரித்தேன். இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை’’ என்றார்.

விஜயதரணியின் செயல்பாடு கள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, ‘‘ஜெயலலிதா படத் திறப்பை ஆதரித்ததும், முதல்வர், பேரவைத் தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததும் விஜய தரணியின் சொந்தக் கருத்து. இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படும். விஜயதரணி பேசியது குறித்து கட்சித் தலைமையில் கவனத்துக்கு கொண்டுச் செல்வோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x