Published : 13 Feb 2018 08:44 AM
Last Updated : 13 Feb 2018 08:44 AM

போர்க்குணமும், துணிச்சலும் ஜெயலலிதாவின் அடையாளம்: படத்தை திறந்துவைத்து பேரவைத் தலைவர் தனபால் புகழாரம்

சட்டப்பேரவை அரங்கில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார். போர்க்குண மும் துணிச்சலும் ஜெயலலிதா வின் அடையாளம் என அவர் புகழாரம் சூட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவப் படம், தமிழக சட்டப்பேரவை அரங்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி பேரவை அரங்கம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வரவேற்று பேசினார். படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால், திறந்து வைத்து பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1982-ல் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார். 21 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகவும் இந்த அவையில் பணியாற்றியுள்ளார். 4 ஆண்டுகளுக்கும் மேல் மாநிலங்களவை உறுப்பினராகவும் 5 ஆண்டுகளுக்கும் மேல் சட்டப்பேரவை யில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

போர்க்குணம், போராட்ட உணர்வு, நெஞ்சுறுதி, துணிச்சல், தளராத நம்பிக்கை இவையெல் லாம் ஜெயலலிதாவை அடையாளம் காட்டும். அடுக்குமொழி அவர் பேச்சில் இருந்ததில்லை. ஒருவரையும் கெடுத்ததில்லை. ஓர் உறுப்பினர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை சரியாகச் செய்தார். அது நமக்கெல்லாம் பாடம். சிறந்த முதல்வரை, உயர்ந்த செயல்பாடுடைய உறுப்பினரை பெற்றதற்கு இந்த பேரவை நிச்சயம் பெருமைப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

முதல்வர் கே.பழனிசாமி பேசும்போது, ‘‘அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகத்தை திறம்பட வழிநடத்தியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. ஜெயலலிதா வழியில் சிறு துளிகூட மாறாமல் அனைத்து நலத்திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் சாதனை சரித்திரத்தை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காகத்தான், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாகவும் அவரது சமாதியை நினைவிடமாகவும் மாற்றும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘வாக்குகளுக்காக மட்டுமே மக்களைச் சந்திக்கும் தலைவர்களுக்கு மத்தியில், மக்களை வாழ வைப்பதற்காகவே அவர்களை சந்தித்த ஒரே தலைவர் ஜெயலலிதா. இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்து வரும் ஆண்டுகளிலும் ஜெயலலிதா ஆட்சியே தொடரும். அதிமுக தொண்டர்களால் நடத்தப்படும் இந்த அரசுதான், அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்யும்’’ என்றார்.

விழா நிறைவில் அரசு கொற டா எஸ்.ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள்,முன்னாள் அமைச்சர்கள், தலை மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சட்டப்பேரவை செயலர் பூபதி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x